» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ.2.65 லட்சம் பறிமுதல்!
வியாழன் 4, ஜூன் 2026 8:46:08 PM (IST)

தூத்துக்குடி கீழூர் மற்றும் ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2.65 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தர்களிடம் இருந்து அதிக அளவில் லஞ்சப் புகார்கள் வருவதாகத் தொடர்ந்து எழுந்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புப் போலீசார் இன்று தூத்துக்குடி கீழூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனையில் இறங்கினர்.
ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் பீட்டர் பால் துறை தலைமையிலான அதிகாரிகள் இன்று திடீர் சோதனையை மேற்கொண்டனர். அலுவலகத்தின் அனைத்து நுழைவு வாயில்களையும் பூட்டி, வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாதவாறு கறாரான கட்டுப்பாடுகளை விதித்துப் போலீசார் இந்த விசாரணையை நடத்தினர்.
இச்சோதனையின் போது, ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் கிருபாகரனிடமிருந்து கணக்கில் வராத ரூ.2.15 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். இத்தொகை குறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கீழூரில் 6 மணி நேர விசாரணை:
இதேபோன்று, தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று மதியம் 2:45 மணி முதல் தற்போதைய இரவு நேரம் வரை தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு சோதனையின் போது, கணக்கில் வராத ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பணத்துடன் அலுவலகத்திற்குள் வந்த சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை மடக்கிப் பிடித்த லஞ்ச ஒழிப்புப் போலீசார், அவரிடமிருந்த பணத்தைப் பறிமுதல் செய்து அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டப் பதிவுத்துறை அலுவலகங்களில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த லஞ்சப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பாய்ந்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி உட்பட பல்வேறு சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புப் போலீசார் இன்று அதிரடிச் சோதனையில் இறங்கியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் விவசாயிகள் சங்கத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு விழா!
வியாழன் 4, ஜூன் 2026 8:30:19 PM (IST)

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி : பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்
வியாழன் 4, ஜூன் 2026 8:16:11 PM (IST)

திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர், உதவி ஆணையர் அதிரடி இடமாற்றம்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு!
வியாழன் 4, ஜூன் 2026 7:41:34 PM (IST)

ஏரல் ஜமாபந்தியில் 3 நாட்களில் 189 மனுக்கள் : 11 பேருக்கு பட்டாக்களை வழங்கினார் ஆட்சியர்!
வியாழன் 4, ஜூன் 2026 5:12:39 PM (IST)

கழிவுமீன் ஆலைகளை மூடக்கோரி 751-வது நாள் போராட்டம் : புதிய அரசு மீது மக்கள் நம்பிக்கை!
வியாழன் 4, ஜூன் 2026 4:54:32 PM (IST)

தமிழகத்தில் பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர்! – திருச்சி சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கண்டனம்!
வியாழன் 4, ஜூன் 2026 3:40:23 PM (IST)










