» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ரோச் பூங்காவவை செப்பனிட்டு பராமரிக்க வேண்டும் : மேயரிடம் கோரிக்கை!
புதன் 19, மார்ச் 2025 3:40:35 PM (IST)

தூத்துக்குடி ரோச் பூங்காவவை செப்பனிட்டு, ரோச் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வண்ணம் கைப்பிடிகளுடன் கூடிய படிகள் அமைத்துத் தர வேண்டும் என பரதர் நல தலைமைச் சங்கம் தலைவர் சேவியர் வாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேயரிடம் அளித்துள்ள மனுவில், "1926-1946 இருபது ஆண்டு காலமாக தொடர்ந்து தூத்துக்குடி நகர் மன்றத் தலைவராக அமர்ந்து அரும்பணிகள் ஆற்றியதோடு 1949 முதல் 1952 வரை மீன்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சராகவும் 1952 முதல் 1957 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றிய தகைசால் தலைவர் ஐயா செவாலியர் ஜே.எஸ்.பி.ரோச் விக்டோரியா நினைவைப் போற்றும் வகையில் துறைமுகச் சாலையில் அவர் பெயரில் பூங்கா அமைக்கப்பெற்று அவரது முழுஅளவிலான உருவச் சிலையும் அமைக்கப்பட்டு அன்னாருக்குச் சிறப்பு செய்யப்பட்டுள்ளது.
திருவுருவச் சிலைக்கு நான்கு தூண்களுடன் மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தாலும் பிறந்த நாள், நினைவு நாளில் அவருக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தும் வண்ணம் மேலே ஏறிச் செல்ல படிக்கட்டுகள் இல்லை. மேலும் அவரது திருவுருவச் சிலை மீது காக்கைகள் வந்து அமர்ந்து எச்சம் பீச்சுவதால் சிலை மிகவும் அருவெறுப்பாகக் காட்சியளிக்கின்றது. மேலும் பூங்காவிலுள்ள விளையாட்டுத் தளவாடங்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்தத் தகுதியற்றவைகளாகக் காட்சியளிப்பதோடு பூங்காவில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, மாலையில் பூங்கா வரும் பொதுமக்கள் கொசுக்கடியினால் மிகுந்த துன்பப்படுகின்றனர்.
தாங்கள் மாநகர மேயராகப் பொறுப்பேற்ற பின்பு தூத்துக்குடி மாநகர் முழுவதும் கண்ணைக் கவரும் வகையிலும் உடல் உறுதியும் உள்ளம் உவகையும் பெறும் வகையில் அழகும் சிறப்பும் மிகு பூங்காக்கள் அமைத்து, மக்கள் மகிழ்ச்சியாகப் பொழுது போக்க, ஓய்வெடுக்க, நடைபயிற்சி மேற்கொள்ள என மெச்சத் தகுந்த நடவடிக்கைகள் எடுத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறீர்கள். அதைப்போலவே ரோச் பூங்காவையும் செப்பனிட்டு, சீராக்கி மீண்டும் பெருவாரியான மக்கள் பயன்பெறத் தருமாறும், ரோச் ஐயாவின் சிலைக்கு மாலையிடும், சுத்தம் செய்யும் வகையில் கைப்பிடியுடன் கூடிய படிகள் அமைத்துத் தர வேண்டும்.
மேலும், சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் துறைமுக மருந்தகம் ஆகிய இடங்களில் சிறிய அளவிலான உயர் மின் கோபுர விளக்குகள் நிறுவிட வேண்டும். கிரேட் காட்டன் சாலையும் தெற்குக் கடற்கரைச் சாலையும் சந்திக்கும் இடத்தில் பழைய துறைமுகம், சார் ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிறுத்தம் ஆகியவை அமைந்துள்ள இப்பகுதியில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்றி இருளடைந்து காணப்படுகின்றது.
துறைமுக மருந்தகம் அருகிலும் இந்நிலையே நீடித்து வருகின்றது. மீன்பிடித் துறைமுகம், பனிமய அன்னை பேராலயம் என இரவு நேரங்களில் அதிகப்படியான மக்கள் இப்பகுதிக்கு வந்து போய் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் பழைய துறைமுக வாயிலிலிருந்து ரோச் பூங்கா வரை சாலையோரங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் மழை நேரங்களில் மழைநீர் தேங்கி மக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவில் மிக மோசமாகவே உள்ளது. ஆகவே மாநகரை அழகுபடுத்தி வருவது போல் இந்தச் சாலையோரத்தையும் செப்பனிட்டு பேவர் பிளாக் கற்கள் பதித்து உயர் மின் விளக்குக் கோபுரங்கள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுச் செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் காஸ்ட்ரோ, அவைத்தலைவர் ஞாயம் ரொமால்ட், துணைத் தலைவர் ஹாட்லி, செயலாளர் ராஜா, போஸ் ரீகன் நிர்வாக செயலாளர் ஆர்தர் மச்சாது, செயற்குழு உறுப்பினர்கள் பெப்பின் முறாயிஸ் மற்றும் ஷெரான் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைத்து கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: வியாபாரிகளிடம் எஸ்.பி., அறிவுறுத்தல்
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 7:58:30 PM (IST)

டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி: 50 சதவீதம் கடல் உணவு உற்பத்தி நிறுத்தம்!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:06:40 PM (IST)

வாஷிங் மிஷினில் பதுங்கியிருந்த சாரை பாம்பு மீட்பு
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 4:41:11 PM (IST)

ஷிப்பிங் நிறுவன ஊழியர் மரணம்: துறைமுகத்தில் உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 4:26:07 PM (IST)

தூத்துக்குடி அருகே செப்டிக் டேங்கில் தவறி விழுந்த நாய், 4 குட்டிகள் மீட்பு!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 4:05:29 PM (IST)

தூத்துக்குடியில் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் உள்வளாகப் பயிற்சி தொடக்கம்
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 3:21:57 PM (IST)
