» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி: 50 சதவீதம் கடல் உணவு உற்பத்தி நிறுத்தம்!

வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:06:40 PM (IST)

அமெரிக்கா வரி விதிப்பு எதிரொலியாக தூத்துக்குடியில் கடல் உணவு நிறுவனங்களில் 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்கள் மீது முதலில் விதித்த 25 சதவீத வரி கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது. இந்நிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை அபராதமாக விதிப்பதாக மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த வரி நேற்று முதல் அமலாகியது. இவ்வாறு 50 சதவீத வரி விதிக்கப்பட்டதால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜவுளி, ஆயத்த ஆடைகள், எந்திர தயாரிப்பு, கடல் உணவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடல் உணவு பொருட்கள் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 26.5 சதவீதமாக உள்ளது. 

குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து இறால், கணவாய், பனாமின் போன்ற கடல் உணவுகள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 25 கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களில் 15 நிறுவனங்கள் தூத்துக்குடியில் இருந்து இயங்குகின்றன. இந்நிறுவனங்களில் இருந்து இறால், கணவாய், ஆக்டோபஸ், மீன் மற்றும் கடல் நண்டுகள் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான மீன், இறால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இறாலின் பங்கு 40 சதவீதம் ஆகும். தற்போது அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் கடல் உணவு ஏற்றுமதி 36 ஆயிரம் கோடியாக சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மட்டும் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்காவுக்கு கடல் உணவுகள் ஏற்றுமதி ஆகி இருந்தது. தற்போது கூடுதல் வரி விதிப்பால் இந்த ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கடல் உணவு நிறுவனங்கள் உற்பத்தியை 50 சதவீதம் குறைத்துள்ளன.

இதுகுறித்து கடல் உணவு உற்பத்தி நிறுவன ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், வன்னாமி இறால்களில் 60 சதவீதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை சீனா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பாவுக்கு செல்கின்றன. தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுகள் அங்கு செல்ல 45 நாட்கள் ஆகும். வழக்கமாக ஒரு மாதத்திற்கு 50 கொள்கலன் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யவும், இதில் பாதியளவு அமெரிக்காவுக்கு அனுப்பப்படும். தற்போது ஏற்றுமதி படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது என்றார்.


மக்கள் கருத்து

பணம் பணம் பணம்Aug 28, 2025 - 06:38:12 PM | Posted IP 104.2*****

கடல் வளங்களை சுரண்டி இயற்கை வளங்களை ஆட்டையை போட்டு எதுக்கு காசுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பனும் ? நம்ம ஊருக்கு நல்ல குறைந்த விலைக்கு விற்க வேண்டியது தானே.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory