» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கலர் கோலப்பொடிகள் விற்பனை ஜோர்!!
ஞாயிறு 12, ஜனவரி 2025 1:34:03 PM (IST)
தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலர் கோலப்பொடி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
மார்கழி மாதங்களில் பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்து வீடுகளின் முன்பு கோலங்கள் வரைவது வழக்கம். நாளை மறுநாள் ஜன.14ல் தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தை முதல் நாளான பொங்கல் அன்று வண்ண பொடிகள் மூலம் கோலங்களை அலங்காரம் செய்வார்கள். இதனால் மக்கள் அதிக அளவில் வண்ண கோலப்பொடிகளை விரும்பி வாங்கி செல்வார்கள்.
இந்நிலையில், தூத்துக்குடி மார்க்கெட் பகுதிகளில் வண்ண கோலப்பொடிகள் அதிகமாக விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. வண்ண கோலப்பொடிகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. 25க்கும் மேற்பட்ட வண்ணங்களில் கோலப்பொடிகள் 200 கிராம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.