» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
ஞாயிறு 12, ஜனவரி 2025 9:51:34 AM (IST)
தூத்துக்குடியில் மஞ்சள் குலை, வாழைத்தார், பனங்கிழங்கு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. தென்மாவட்டங்களில் வீட்டு வாசலில் கோலமிட்டு, புது மண் அடுப்பு மற்றும் புது மண்பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
இதற்காக மக்கள் அதிக அளவில் மண்பானைகளை வாங்குவார்கள். இதனால் தூத்துக்குடிக்கு ஏரல், செய்துங்கநல்லூர், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து பல வண்ண டிசைன்களில் பானைகள், மண் அடுப்புகள், மண்சட்டிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
மேலும் பொங்கல் பண்டிகையின் போது, பொதுமக்கள் பனைஓலை கொண்டு பொங்கலிடுவது வழக்கம். இதனால் விவசாயிகள் பனை ஓலைகளை வெட்டி தற்போது காயவைத்து தயார் செய்து வருகின்றனர். இதேபோன்று விவசாயிகள் மஞ்சள் குலை, வாழைத்தார், பனங்கிழங்கு உள்ளிட்டவற்றையும் விற்பனைக்காக பல்வேறு ஊர்களுக்கும் விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். இதனால் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.