» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் பெண் அதிகாரி-போலீஸ் ஏட்டு மோதல்: 2 பேரும் மருத்துவமனையில் அனுமதி!
ஞாயிறு 12, ஜனவரி 2025 9:44:20 AM (IST)
திருச்செந்தூர் கோவிலில் பெண் அதிகாரி - போலீஸ் ஏட்டு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு கோவிலில் இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் உள்ளது. கோவிலில் கட்டண தரிசனம் செய்வதற்காக அங்குள்ள மகாமண்டபத்திற்குள் 2 வரிசை செல்லும்.
இந்த கோவிலில் உள்துறை கண்காணிப்பாளராக விஜயலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலையில் அவர் மகாமண்டபத்தில் கட்டண தரிசன வரிசையை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கோவை நகர தலைமை போலீஸ் ஏட்டுவாக பணியாற்றி வரும் கார்த்திக் என்பவர் சாமி தரிசனம் செய்ய ரூ.100 கட்டண வரிசை வழியாக மகாமண்டபத்திற்குள் வந்தார்.
அங்கு பணியில் இருந்த விஜயலட்சுமி, கார்த்திக்கை பார்த்து இந்த வரிசையில் கூட்டம் அதிகமாக உள்ளது. அதனால் அடுத்துள்ள ரூ.100 தரிசன வரிசையில் செல்லுமாறு கூறினார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக், விஜயலட்சுமியின் கையை முறுக்கியதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த கோவில் தனியார் பாதுகாவலர்கள் அங்கு விரைந்தனர். அவர்கள், கார்த்திக் கோவிலுக்குள் செல்போன் கொண்டு வந்ததாக கூறி அதை பிடுங்கும் போது அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து விஜயலட்சுமி, கார்த்திக் ஆகியோர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவங்கள் குறித்து 2 பேரும் திருச்செந்தூர் கோவில் போலீசில் தனித் தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் கோவிலுக்குள் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்செந்தூர் கோவிலில் பெண் அதிகாரி-போலீஸ் ஏட்டு மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.