» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மணல் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை: வருவாய், காவல் துறையினருக்கு வட்டாட்சியர் உத்தரவு
ஞாயிறு 12, ஜனவரி 2025 10:55:53 AM (IST)
விளாத்திகுளம் பகுதியில் மணல் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய் மற்றும் காவல் துறையினருக்கு வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் வைப்பாற்றிலிருந்து இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் மூலம் அதிகளவில் ஆற்று மணல் திருட்டு நடைபெற்று வருவதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து மணல் திருட்டை தடுப்பதற்காக விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தலைமையில் விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்தில் அமைந்துள்ள அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், மணல் திருட்டு நடைபெற்று வரும் வைப்பாற்று கரையோர பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்டவர்களுடன் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் மணல் கொள்ளையை தடுப்பதற்கு அதிகாரிகளுடன் ஆலோசனையை செய்ததோடு மட்டுமன்றி, இரவு நேரங்களில் தங்களது பகுதிகளில் கனிம வள கொள்ளை, ஆற்று மணல் திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதை முற்றிலுமாக தடுப்பதற்கு இரவு நேரங்களில் கண்டிப்பான முறையில் ரோந்து பணிக்கு செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு மணல் திருட்டு நடைபெறும் பட்சத்தில் சட்ட விரோதமாக மணல் திருடுபவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.