» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் அருகே கார் மோதி பாதயாத்திரை பக்தர் பலி
ஞாயிறு 12, ஜனவரி 2025 9:27:28 AM (IST)
திருச்செந்தூர் அருகே கார் மோதி பாதயாத்திரை பக்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆணையூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ராஜூ (27). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள், உறவினர்களுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு வந்தார். நேற்று அதிகாலையில் திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் பகுதியில் சாலையோரம் அனைவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக ராஜூவின் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜூ இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவரை கைது செய்தனர்.