» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாணவர்களை 100 சதவீதம் உயர்கல்வியில் இணைக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:20:11 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து மாணவர்களையும் 100 சதவீதம் உயர்கல்வியில் இணைக்க முழுமையான அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி கல்லூரி மற்றும் கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளியில் இன்று(01.04.2025) உயர்கல்வி வழிகாட்டி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.
நமது மாவட்டத்தில் 2024 – 25ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரையும் உயர்கல்விக்கு அனுப்புவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நமது மாவட்டம் உயர்கல்வியில் 100 சதவீதம் அடைவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
இப்பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்த்தாவது: பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லாமல் இருப்பதற்கான காரணங்கள் தொலைதூரம், குடும்பத்தை விட்டு பிரிதல், குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்றோர்கள் வெளியே அனுப்புவதற்கு யோசித்தல் மற்றும் குடும்பத்திலுள்ளோர் உயர்கல்வியிலுள்ள வாய்ப்புகளை அறியாமல் இருப்பது போன்றவையாகும். குறிப்பாக தொழிற்கல்விகளில் செய்முறைக்கு 800 மணி நேரமும் (ITI), 600 மணி நேரமும் (Diploma) செலவிடுகிறார்கள். இதைப்பற்றிய தெளிவு பெற்றோர்களிடம் இல்லை.
மாணவர்களுக்கான உதவித்தொகை தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டம், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான உயர்கல்வி ஊக்குவிப்புத்தொகை, BC/ MBC/ DNC SC/ST கல்வி உதவித்தொகை, SC கிறிஸ்தவ மாணவர்களுக்கான உதவித்தொகை, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, தொழிலாளர் நலத்துறை கல்வி உதவித்தொகை, ரேங்க் ஹோல்டர் கல்வி உதவித்தொகை, NPTEL இணைய வழி கல்வி உதவித்தொகை, தமிழ்நாடு அரசு வழங்கும் 7.5% ஒதுக்கீடு ஆகிய மேற்கூறிய உதவித்தொகைகளை பற்றி பெற்றோர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு தெளிவான புரிதல் இல்லை.
சில குடும்பங்களில் பெண்களின் உயர்கல்வியில் தெளிவான புரிதல் இல்லாமல் அருகாமையில் உள்ள கல்லூரிகளில் மாணவிகளின் விருப்பம் இல்லாமல் சேர்த்து விடுகிறார்கள். இக்காரணங்களை தவிர்ப்பதற்காக நமது மாவட்டத்தில் உள்ள GER Team -ல் உள்ள ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள மாணவர்களை நான்கு பிரிவுகளாக பிரிக்க வேண்டும். அவை முறையே (1) உயர்கல்வியில் விருப்பம் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர் – பச்சை நிறம், (2) உயர்கல்வியை பற்றிய புரிதல் இல்லாத பெற்றோர் மற்றும் மாணவர் – மஞ்சள் நிறம், (3) விருப்பம் இல்லாத பெற்றோர் – ஆரஞ்சு நிறம், (4) விருப்பம் இல்லாத மாணவர்கள் – சிவப்பு நிறம் ஆகியனவாகும்.
மாணவர்கள் தங்களின் கடைசி பள்ளித்தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்களை வைத்து 80 விழுக்காடு, 60 – 80 விழுக்காடு, 60 விழுக்காடுக்கு கீழே என்று மூன்று வகைப்படுத்தி ஒவ்வொரு வகையிலும் நான்கு பிரிவுகளை ஆராய்ந்து பட்டியலிட வேண்டும். இப்பட்டியலில் பச்சைப் பகுதியில் உள்ள மாணவர்களை வகுப்பறை சூழலில் தங்களது பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை பெறுவதற்கு முன்பாக குறைந்தது ஐந்து கல்லூரிகளில் விண்ணப்பிக்க செய்வதே ஆசிரியர்களின் தலையாய கடமை ஆகும்.
மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு பகுதியில் உள்ள மாணவர்களை ஒரு பிரிவு ஆசிரியர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து அம்மாணவர்களின் விருப்பங்களை அறிந்து, கல்லூரி கனவு களப்பயணங்களை மேற்கொண்டும், அரசு துறைகளுக்கு அழைத்து சென்றும், அங்குள்ள செயல்பாடுகளை தெளிவாக விளக்கி குறைந்த பட்சம் மூன்று கல்லூரிகளுக்காவது விண்ணப்பிக்கச் செய்வதே முக்கிய நோக்கம் ஆகும்.
விண்ணப்பிக்க பொருளாதாரம் ஒரு தடையாக இருப்பதாக உணர்ந்தால் ஆசிரியர்கள் குழுவோ, பள்ளி மேலாண்மை குழுவோ, நன்கொடையாளர் குழு மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்க உதவி செய்ய வேண்டும். எதுவும் இயலவில்லையென்றால் மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகம் உதவி செய்வதற்கு தயாராக இருக்கிறது. மேற்கூறிய இப்பணிகளை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மே மாதம் இறுதிக்குள் கல்லூரிக் கனவு களப்பயணத்தை முடிக்க வேண்டும். உயர்கல்வி பிரிவிற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்வதற்கான தொடக்க மற்றும் இறுதி தேதியும் தொடர்ச்சியாக தரப்படும்.
இச்செயல்களில் நிறைவு பெறாத மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அழைத்து மாவட்ட நிர்வாகத்தால் ஜுன் மாதம் முதல், மாதம் இருமுறை "மாணவர் குறைதீர் கூட்டம்” நடத்தப்படும். விண்ணப்பம் செய்த அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில்/ தொழிற்கல்வியில் சேர்ந்து விட்டார்களா என ஆசிரியர் குழு தொடர்ச்சியாக கண்காணிக்கும். (ஆரஞ்சு மற்றும் சிவப்பு வகையினர்)
இப்பணிகளை பள்ளி மேலாணமைக்குழு, ஆசிரியர்குழு தொடர்ச்சியாக கண்காணித்து வாராந்திர அறிக்கையை மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலகம் எல்லா அறிக்கைகளையும் பெற்று, கல்வி மாவட்டங்களாக வகைப்படுத்தி, தொகுத்த அறிக்கையினை மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், PMU குழுவிடம் சமர்ப்பித்து இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மீளாய்வுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
மாணவர்கள் உயர்கல்வியை தேர்ந்தெடுக்கும்போது சிறப்பான ஆலோசனை வழங்க வேண்டும். வருங்காலங்களில் அத்துறையிலுள்ள உயர்வுகளை தெளிவாக எடுத்துக்கூறி பாடங்களை தேர்ந்தெடுக்க கூறவேண்டும். இறுதியாக "எல்லா ஆசிரியர்களும் இப்பணியில் தங்களை ஈடுபடுத்தி நமது மாவட்டத்திலுள்ள அனைத்து மாணவர்களையும் 100 சதவீதம் உயர்கல்வியில் இணைக்க முழுமையாக அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும்” என தெரிவித்தார்.
இப்பயிற்சி முகாமில் மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட உதவித் திட்ட அலுவலர், அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், உயர்கல்வி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி போட்டா - ஜியோ ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 12:02:38 PM (IST)

பாலியல் குற்றச்சாட்டு: பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக, தவெக ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 11:40:08 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு : கொள்ளையன் கைது!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 11:35:35 AM (IST)

கிருஷ்ணராஜபுரம் பகுதியில் ரவுண்டானா: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:49:35 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி அருகே குப்பைகள் குவிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:39:20 AM (IST)

தூத்துக்குடியில் 3வது நாளாக வழக்கறிஞர்கள் ஸ்ட்ரைக் : நீதிமன்ற பணிகள் பாதிப்பு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:27:30 AM (IST)
