» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சீரமைப்பு பணிகள் விரைவி்ல் தொடக்கம்!

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:19:09 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் சேதம் அடைந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்செந்தூரில் பிரசித்திபெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு சுற்றுலா வேன்கள், பஸ்கள், கார்களில் பக்தர்கள் குடும்பத்தினருடன் பயணம் செய்து வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வரை சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலை கடந்த 2021-ம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

மேலும் பக்தர்களின் வாகனங்கள் மட்டுமின்றி, குலசேகரன்பட்டினம் அனல்மின்நிலையம் மற்றும் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்காக நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் இயங்கி வருகின்றனர். இத்தகைய போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றது. 

இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் வாகனங்கள் சிக்கி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் பரிதவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆத்தூர் முதல் ஆறுமுகநேரி வரையில் ரோட்டில் இருந்த பள்ளங்கள் சமீபத்தில் மூடப்பட்டு உள்ளன. ஆனால் முக்காணி முதல் தூத்துக்குடி வரை மிகவும் மோசமாக உள்ளது. இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். 

மேலும், கார், வேன் போன்ற வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி பழுதடையும் நிலையும் தொடர்ந்து வருகிறது. இதனால் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தினத்தந்தியில் தொடர்ந்து செய்தி பிரசுரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய கோட்ட பொறியாளர் சண்முகசுந்தரம் கூறும் போது, தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோடு தூத்துக்குடியில் இருந்து முக்காணி வரை சுமார் 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு சீரமைக்க ரூ.22.40 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த பணியை தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்து உள்ளன. இதனால் ஒரு வாரத்துக்குள் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.


மக்கள் கருத்து

முத்து நகர் குலாம்Apr 2, 2025 - 09:48:51 AM | Posted IP 172.7*****

1 km = 1.317 crore wow!!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory