» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
சனி 15, மார்ச் 2025 4:23:44 PM (IST)

தூத்துக்குடி கீழத்தட்டப்பாறை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.77,41,331 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
தூத்துக்குடி வட்டம், கீழத்தட்டப்பாறை கிராமத்தில் இன்று (15.03.2025) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும உழவர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற அரசுத்துறைகள் சார்பில் 143 பயனாளிகளுக்கு ரூ. 77,41,331 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது: இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு திரளாக வந்திருக்கக்கூடிய ஊர் பொதுமக்களே ஊடக நண்பர்களே அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பிறந்த குழந்தைகள் முதல் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் வாயிலாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் மாதந்தோறும் மாவட்ட தலைநகரிலிருந்து மிகவும் தொலைதூரத்தில் உள்ள கிராமத்தினை தெரிவு செய்து அக்கிராமத்திற்கு அரசு இயந்திரங்கள் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அரசுத்துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள், அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுக்கள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலனை செய்து தகுதியான மனுதாரர்களுக்கு அவர்களுக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று பல்வேறு விதமான குறைதீர்ப்பு நடவடிக்கைகளை நமது அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தின கோரிக்கை மனுக்களை பெறக்கூடியது.
கடந்து ஒரு ஆண்டாக நடைபெறக்கூடிய உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தாலுகாவை தேர்ந்தெடுத்து அந்த பகுதியில் உள்ள முக்கிய இடங்களிளெல்லாம் ஆய்வு செய்து அங்கும் மனுக்களை பெறக்கூடிய திட்டம், அதன்பிறகு முதலமைச்சர் அவர்களுடைய ஒரு உன்னத திட்டமான மக்களுடன் முதல்வர் முகாம்களை அமைத்து அதன்மூலம் மனுக்களை பெறக்கூடிய திட்டம்.
இப்படி பல்வேறு வகையான திட்டங்களின் மூலம் மக்களினுடைய கோரிக்கை மனுக்களைப் பெற்று அதற்கான உகந்த தீர்வுகளை நமது அரசுத் துறை அலுவலர்கள் செய்து வருகிறார்கள். இதில் அதிகமான கோரிக்கை மனுக்கள் வரக்கூடிய துறைகளைச் சேர்ந்தவர்கள் விரைவாகவும், சரியான தீர்வும் கொடுக்க வேண்டும். குறிப்பாக வருவாய்த்துறையில் அதிகமான கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. இந்த மனுக்கள் அனைத்தையும் வட்டாட்சியர், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஆகிய அனைவரும் சரியான முறையில் ஆய்வு செய்து உரிய தீர்வுகளை அந்த மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
அதனடிப்படையில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுக்கள் 69 பெறப்பட்டு, அவற்றை முழுமையாக பரிசீலனைசெய்து அதில் 49 மனுக்கள் ஏற்பளிக்கப்பட்ட வகையிலும், அதற்கு பின்னர் கீழத்தட்டப்பாறை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து தகுதியான வகையிலும் என மொத்தம் 143 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் இன்றையதினம் வழங்கப்படவுள்ளது.
தகுதியின்மை காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ள மனுக்களின் மனுதாரர்களுக்கு எதற்காக மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படும். அதன்படி, இன்றையதினம் நடைபெறும் இந்த மக்கள் தொடர்பு முகாமில், மொத்தம் 143 பயனாளிகளுக்கு ரூ.77,41,331 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது.
இந்த கீழத்தட்டப்பாறை ஊராட்சியைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பொறுத்த வரையில் வேளாண் பயிர் சாகுபடி குறைந்து, அதே நேரத்தில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்புத் தொழில் செய்வதற்கு மிகவும் ஏற்றபகுதியாக இப்பகுதி உள்ளது. கால்நடை வளர்ப்போர்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கால்நடை வளர்க்க விரும்பும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கறவைமாடுகள் வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி வழங்க தயாராகவுள்ளோம். விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்களுடைய சுய உதவிக்குழு அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு வழியாக விண்ணப்பிக்கலாம்.
பொதுவாக ஒரு கிராமப் பொருளாதரத்தில் விவசாயம் தான் மிக முக்கியமான வருமான ஆதாரமாக இருக்கும். ஆனால் அதைவிட அதிகமான வருமானம் தரக்கூடிய ஆதாரமாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் சார்ந்த பிற தொழில்களாகும். ஒரு குடும்பத்தில் இரண்டு கறவைமாடுகள் இருந்தால் போதும். அந்த குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய வகையில் அதிலிருந்து வருமானம் கிடைக்கும்.
மேலும், ஏற்கனவே கால்நடை வளர்த்து வந்தாலும் தங்களது தொழிலை மேலும் அபிவிருத்தி செய்துகொள்ளும் வகையில் தேவையான கடனுதவிகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று ஆடு வளர்ப்பதற்கும் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்தொழிலில் செலுத்தியுள்ள முதலீட்டை மிகவும் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கக்கூடிய ஒரு தொழில் ஆடு வளர்ப்புத் தொழில். எனவே விருப்பமுள்ளவர்கள் மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
அதேபோல், கோழி வளர்ப்பிற்கும் தேவையான கடனுதவி வழங்கப்படுகிறது. கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் வங்கிக் கடனுதவி பெற்று பயன் பெறலாம். அதுமட்டுமல்லாமல் கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு, கொள்முதல் செய்யும் முறை, இலாபகரமான விற்பனை, சத்துமிகுந்த தீவன ஊட்ட முறை உள்ளிட்டவை குறித்து உரிய பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக கால்நடை பராமரிப்புத்துறை, மகளிர் திட்டம், ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து கூட்டுறவுத்துறையின் வழியாக நமது மாவட்டத்தில் மட்டும் முன் முயற்சி எடுத்துள்ளோம்.
இதில் எந்த அளவிற்கு மகளிர்கள் அதிகளவில் பயன்பெற்று வெற்றிகரமான திட்டமாக மாற்றுகிறீர்களோ அதன் மூலமாக உங்களுடைய வருமானம் தற்போது உள்ள நிலையிலிருந்து ஒரு மடங்கு உயர்வதற்கான வாய்ப்பு வசதிகள் உள்ளன. எனவே, அனைத்து மகளிர்களும் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், தமிழ்நாடு அரசின் மிகவும் ஒரு உன்னதமான திட்டம் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம். வீட்டிற்கே நேரடியாக வந்து உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவச் சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள அற்புதமான திட்டம் தான் இந்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டம். இது போன்ற திட்டம் வேறு எந்தவொரு நாட்டிலோ, மாநிலத்திலோ இல்லை.
நம்ம மாநிலத்தில் மட்டும்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றையதினம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் குறிப்பாக 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் உரிய பரிசோதனை செய்துகொண்டு, சிகிச்சை தேவையிருக்கும் பட்சத்தில் மருத்துவர்கள் வழங்கக்கூடிய மாத்திரைகளை முறையாக உண்டு, ஆலோசனைகளை பின்பற்றி இரத்த அழுத்தத்தையும், சர்க்கரை நோயினையும் கட்டுப்படுத்தி கட்டுக்குள் வைத்திருந்தால் நமது வாழ்நாளில் வரக்கூடிய முக்கியமான நோய்கள் பிற்காலத்தில் வராமல் தவிர்க்கலாம் என கூறிக்கொண்டு வருகை தந்து சிறப்பித்துள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பொதுமக்கள் அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, இணை இயக்குநர் (கால்நடை) சஞ்சீவிராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட்ஆசிர், தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:20:02 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர் திடீர் மரணம்!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:13:04 PM (IST)

சாலையில் பள்ளத்தை சரிசெய்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:08:41 PM (IST)

மது போதையில் டார்ச்சர்: கணவனை கட்டையால் தாக்கிய மனைவி கைது!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:04:44 PM (IST)

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் அவதார பெருமங்கல விழா : மக்கள் நலப்பணிகள் வழங்கல்!
ஞாயிறு 16, மார்ச் 2025 4:40:15 PM (IST)
