» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செய்துங்கநல்லூர் வாரச்சந்தையில் பெல்ஜியம் தம்பதியர்: பழங்கள் வாங்கி உண்டு மகிழ்ந்த ருசிகரம்!
புதன் 22, ஜனவரி 2025 8:48:48 PM (IST)
செய்துங்கநல்லூர் சந்தைக்கு வந்த பெல்ஜியம் - கெனட்டை சேர்ந்த கோயின் ராடு - கரோலின் தம்பதியினர் அங்கிருந்த பழக்கடையில் பழங்களை ருசி பார்த்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் வாரம்தோறும் புதன்கிழமை நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வாரச்சந்தையில் காய்கறி, பழங்கள், மீன்கள், கருவாடு என அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படும். இங்கு பொருட்கள் விற்பனை செய்வதற்காக சாத்தான்குளம், திசையன்விளை, திருச்செந்தூர், உடன்குடி போன்ற பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகை தருவார்கள்.
செய்துங்கநல்லூர் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாட்டார்குளம், அனவரதநல்லூர் உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வருகை தருவார்கள். இதற்கிடையில் பெல்ஜியம் - கெனட்டை சேர்ந்த கோயின் ராடு - கரோலின் தம்பதியினர் சந்தைக்குள் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த பழக்கடையில் பழங்களை ருசி பார்த்தனர்.
வாரச்சந்தைக்குள் சென்று காய்கறிகள் குறித்தும், பழ வகைகள் குறித்தும் வியாபாரிகளிடம் கேட்டறிந்தனர். காய்கறிகளின் வகைகள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் கேட்டு ஆச்சரியப்பட்டனர். கமாராவில் கரோலின் அங்கு கிடைத்த தமிழக பண்பாடுகளை படம் பிடித்தனர். அதோடு மட்டுமல்லாமல் தங்களுக்கு பிடித்த முகங்களையும் கமராவில் பதிவு செய்தனர். சந்தையில் வெங்காயத்தை சொழவால் புடைத்த பெண்ணை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவர் அருகே சென்று புகைப்படம் எடுத்தார் கரோலின்.
எடுத்த புகைப்படத்தை அந்த பெண்மணிகளிடம் காட்டி மகிழ்ச்சி அடைந்தார். பெல்ஜியம் பெண்மணியை பார்த்தும் அங்கிருந்த பெண்கள் ஏம்மா நீ ரொம்ப கலரா இருக்க என்று வர்ணித்தனர். தமிழ் புரியாவிட்டாலும், அவர்கள் தம்மை பாராட்டுகிறார்கள் என்று புரிந்து கொண்டு கரோலின் மகிழ்ச்சியுடன் சிரித்தபடி அங்கிருந்து கிளம்பினார். அவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தான் எழுதிய தூத்துக்குடி மாவட்ட வரலாறு ஆங்கில புத்தகத்தினை கொடுத்து வரவேற்றார்.
இதுகுறித்து அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த சிவராஜ் கூறும்போது, இவர்கள் தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு மற்றும் ஆலயங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் தங்கியுள்ளார்கள். நாளை உலக நாகரீகத்தின் தொட்டிலான ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை பார்வையிட உள்ளார்கள் என்று கூறினார். கிராம மக்கள் கூடும் செய்துங்கநல்லூர் சந்தையில் தீடீரென வந்த பெல்ஜியம் தம்பதிகளால் அங்கு வந்த வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.