» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாத்தான்குளம் வட்டத்தில் ஆட்சியர் க.இளம் பகவத் ஆய்வு
புதன் 22, ஜனவரி 2025 4:28:58 PM (IST)
"உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் சாத்தான்குளம் வட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியர் க.இளம் பகவத் ஆய்வு செய்தார்.
சாத்தான்குளம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்,சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து களஆய்வு மேற்கொண்டு 47 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தொடங்கப்பட்ட ‘உங்களைத் தேடிஉங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், இன்று (22.01.2025) சாத்தான்குளம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கள ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, சாத்தான்குளம் வட்டத்திற்குட்பட்ட அரசூர் ஊராட்சிக்குட்பட்ட இடைச்சிவிளை தொடக்கப் பள்ளியில் ரூ.17.7 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமானப் பணியினையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் என்னும் எழுத்தும் முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுவதையும், தோட்டக்கலை துறையின் மூலம் முருங்கை பயிரிடப்பட்டு வருவதையும், நடுவக்குறிச்சியில் தோட்டக்கலை துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2024 - 2025 ன் கீழ் நிரந்தர பந்தல் அமைக்கப்பட்டுள்ளதையும், தொடர்ந்து, சாத்தான்குளம் வட்டம் முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், விஜயராமபுரம் துணை சுகாதார நிலையம், கோமநேரி குளத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கட்டு, சாத்தான்குளம் தேர்வு நிலைப் பேரூராட்சியில் ரூ.562.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் பேருந்து நிலையத்தினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், களஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.
மேலும், சாத்தான்குளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கனிவுடன் கேட்டறிந்தார்கள். பின்னர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.2075 மானியத்தில் பேட்டரி தெளிப்பான்கள், நிலக்கடலை நுண்ணூட்டம், வருவாய்த்துறை சார்பில், 47 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களையும் வழங்கிய பிறகு சாத்தான்குளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அனைத்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் முற்பகலில் மேற்கொண்ட களப்பயணங்கள், அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி சாத்தான்குளம் வட்டத்த்pல் விரைந்து மக்களை சென்றடைவதை மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதி செய்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆய்வுக்கூட்டத்தில், அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தரு.சுகுமாரன், செயற்பொறியாளர் (கீழ்தாமிரபரணி மற்றும் காேரம்பள்ளம் கோட்டம்) வசந்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.