» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சரக்குபெட்டகங்கள் கையாளுவதில் 7% வளர்ச்சி

புதன் 22, ஜனவரி 2025 3:28:42 PM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சரக்குபெட்டகங்கள் கையாளுவதில் கடந்த நிதியாண்டை விட 7 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது. 

இது தொடர்பாக துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், சரக்கு பெட்டகங்களை கையாளுவதில் நடப்பு நிதியாண்டு டிசம்பர் 2024 வரை 5,81,557 TEUS சரக்குபெட்டகங்களை கையாண்டு கடந்த நிதியாண்டு டிசம்பர் 2023-ல் 5,43,531 TEUS கையாண்ட அளவைவிட 7 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்குபெட்டகங்கள் கையாளுவதின் செயல்பாட்டு திறன் 2013-14 நிதியாண்டு 5,07,735 TEUS இருந்து 2023-24-ல் 7,47,363 TEUS சரக்கு பெட்டகங்களாக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதியாண்டு டிசம்பர் 2024 வரை துறைமுகத்திற்கு சரக்குபெட்டக கப்பல் வந்து செல்லும் நேரமானது சராசரி 19.92 மணி நேரமாகும். இது பெருந்துறைமுகங்களை பொருத்தவரையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முதன்மை இடத்தை பிடித்து தனது நிலைபாட்டினை 2 ஆண்டுகளாக தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேலும், கூடுதலாக உலக தரத்திற்கு இணையாக ஒரு மணி நேரத்திற்கு 30 சரக்குபெட்டக நகர்வுகளை கையாளும் திறனுடன் செயல்பட்டு வருகிறது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் முதன்மை சரக்குபெட்டக முனையங்களான தக்ஷின் பாரத் கேட்வே டெர்மினல், தூத்துக்குடி சர்வதேச சரக்குபெட்டக முனையம், மற்றும் PSA SICAL சரக்கு பெட்டக முனையம் ஆகிய முனையங்கள் இணைந்து வருடத்திற்கு 1.6 மில்லியன் சரக்குபெட்டகங்களை கையாளும் திறனைப் பெற்றுள்ளன. வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் சீரான சரக்குபெட்டக போக்குவரத்திற்கு வசதியாக 2 உள்நாட்டு சரக்குபெட்டக கொட்டகை மற்றும் 15 சரக்குபெட்டக நிலையங்களும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலுள்ள முனையங்களில் வாரம் ஒன்று கொழும்புக்கு எட்டு கப்பல் சேவைகள் இயக்கபடுகின்றன. மேலும் முந்த்ரா, பிப்பாவாவ், கொச்சி, ஜபல் அலி, மலேசியா, வியட்நாம, தாய்லாந்து, சிங்கப்பூர், சீனா மற்றும் தூரகிழக்கு நாடுகளுக்கும் கப்பல் சேவைகளை வழங்குவதின் மூலம் துறைமுகத்தின் சர்வதேச வர்த்தக இணைப்பு வலுப்பட்டுள்ளது.

சர்வதேச கடல் வழித்தடத்திற்கு அருகில் அமைந்து 24x7 அனைத்து காலநிலைக்கும் ஏற்றவாறு இயங்கும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நெரிசல் இல்லாத சாலை, ரயில் இணைப்பு மற்றும் தடையற்ற துறைமுக நுழைவாயில் போன்றவற்றின் மூலம் தடையின்றி சரக்குகளை கையாள முடிகிறது. துறைமுகம் சரியான நேரத்திற்கு அனுப்பப்பட வேண்டிய முக்கியமான சரக்குகளுக்கு முன்னுரிமை அளித்து அதன் முறையான விநியோகத்திற்கு உறுதியளிக்கிறது. 

மேலும் கப்பல் பயணம் துவங்கும் முன்பு கடைசி நிமிடத்தில் வரும் சரக்குகளைக் கையாளும் வசதியும் துறைமுகத்தில் உள்ளது. எளிமையான வாணிபம் மூலம் ஏற்றுமதியாளர்கள் ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவை வரி நிதிக்கான ஆவணங்களை பதிவு செய்தவுடன் பணத்தைத் திரும்ப பெற முடிகிறது.

இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாறுவதற்கு இந்திய அரசு அளித்த ஊந்துதலினாலும் வளர்ந்து வரும் உலகளாவிய புவிசார் அரசியல் சூழ்நிலையினாலும், தூத்துக்குடியைச் சுற்றி அமையவிருக்கும் பசுமை ஹைட்ரஜன் மையம், துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகள், தமிழ்நாட்டின் கடலோரத்தில் அமையவுள்ள கடல் காற்றாலை மையம், முன்மொழியப்பட்டுள்ள சென்னை – கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தில் வரும் தொழிற்சாலைகள், தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அமையவிருக்கும் சூரிய மின் நிலையங்கள், மரச்சாமான்கள் பூங்கா மற்றும் தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள மின் வாகனத் தயாரிப்பாளரான ‘ஏiகெயளவ’ போன்றவற்றின் மூலம் இன்னும் 3 அல்லது 5 வருடங்களில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சுமார் 4 முதல் 5 மில்லியன் TEUS சரக்கு பெட்டகங்களைக் கையாண்டு பெரும் வளர்ச்சியைக் காண உள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேகமாக வளர்ந்து வரும் சரக்குபெட்டக போக்குவரத்து வளர்ச்சியினை கருத்தில் கொண்டு வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் அபிவிருத்தி திட்டமான வெளிதுறைமுக திட்டத்தினை முன்மொழிந்தது, இதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வெளிதுறைமுக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இத்திட்டமானது 1கிலோ மீட்டர் நீளமுடைய 2 சரக்குபெட்டக தளங்கள் 16.5 மீட்டர் மிதவை ஆழத்துடன் 4 மில்லியன் டிஇயு சரக்குபெட்டகங்களை கையாளும் வசதியுடன் அமையபெற உள்ளது. இத்திட்டத்தின் ஒப்பந்தம் உலகதரமிக்க சரக்குபெட்டக முனையம் இயக்குபவர்கள் பங்குபெறும் வகையில் கோரப்பட்டு உள்ளன.

இவ்வொப்பந்தம் கோருவதற்கான இறுதி நாள் பிப்ரவரி மாதம் 11-ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம் முடைவடைந்த பின்பு துறைமுகத்தில் சரக்குபெட்டகங்கள் கையாளும் திறன் அதிகரிப்பதோடு அதிக மிதவை ஆழமுடைய பெரிய வகை கப்பல்களையும் கையாள முடியும். வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், கூறுகையில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் தருவாயில் இந்தியாவின் கிழக்கிந்திய சரக்குபெட்டக பரிமாற்ற முனையமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் திகழும் என்று கூறினார்.

மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சர்வதேச கடல் வழிதடத்தின் அருகாமையில் அமையபெற்றிருக்கும் சிறப்பு, நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் அனைத்து கடல் வாணிப தொழிலில் ஈடுபட்டிருக்கும் அமைப்புகளின் ஒத்துழைப்புகளின் மூலம் வ.உ. சிதம்பரனார் துறைமுகம் சர்வதேச கடல்வாணிபத்தில் சிறந்த வாய்ப்புகளை பெறும் என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory