» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு: ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை

புதன் 22, ஜனவரி 2025 8:52:29 AM (IST)



குலசேகரன்பட்டினம் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டு வரும் பகுதியில் நிபுணர்கள் குழு மூலம் முறையாக ஆய்வு நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் குவிந்து நேர்த்திக்கடனை செலுத்துவர். இப்படி பல லட்சம் பக்தர்கள் வந்து செல்லும் குலேசகரன்பட்டினம் கடற்கரையில் கடந்த சில வாரங்களாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் கடற்கரையில் கடந்த சில வாரங்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. 

இதுவரை இக்கடற்கரை ஓரத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் சரிந்து விழுந்துள்ளன. நாளுக்குநாள் கடற்கரை பகுதி சுருங்கி வருகிறது. ஏற்கனவே, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடலின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டதால், பக்தர்கள் நீராடும் பகுதியில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் நீராட மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதியை கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

இந்த கடல் அரிப்பு குறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, ஐ.ஐ.டி. நிபுணர்கள் குழு மூலம் ஆய்வு நடத்தி, கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் திருச்செந்தூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குலசேகரன்பட்டினம் கடற்கரையிலும் தொடர் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடற்கரையோரத்தில் உள்ள பனைமரங்கள் சரிந்து விழுந்து, கடலுக்குள் அடித்து செல்லப்பட்டு வருகின்றனர்.

மேலும் கடற்கரையோரம் உள்ள நூற்றுக்கணக்கான பனைமரங்களும் கடலுக்குள் அடித்துச் செல்லும் அபாயநிலை நீடித்து வருகிறது. தொடர்ந்து கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியில், பனைமரங்கள் விழும் நிலையில் உள்ள இடங்களில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் ‘செல்பி’ எடுத்தும், புகைப்படம் எடுத்தும் கடலில் நீராடியும் வருகின்றனர்.

தற்போது இந்த கடற்கரை பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள நிலையில் கடல் அலையில் சிக்கியோ அல்லது பனைமரம் விழுந்தோ விபத்தில் சிக்கும் அபாயம் இருக்கிறது. இதை உணராமல் தினமும் இளைஞர்கள் இப்பகுதிக்கு வந்து ‘செல்பி’ எடுத்து விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

எனவே, முக்கியத்துவம் வாய்ந்த குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியில், நிபுணர்கள் குழு மூலம் முறையாக ஆய்வு நடத்த வேண்டும். இக்கடற்கரையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடல் அரிப்பை தடுத்து, கரையோரம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பனை மரங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory