» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நடைமேடையை உயர்த்தாவிட்டால் ரயில் மறியல் : அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்!!
ஞாயிறு 12, ஜனவரி 2025 9:00:30 AM (IST)
காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை உயர்த்தியமைக்காவிட்டால் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய நடைமேடை மிகவும் தாழ்வாக இருப்பதால், முதியோர், பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்துப் பொதுமக்களும் தொடர்வண்டியில் ஏறி இறங்குவதற்கு மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களில் – ஒன்றிய அரசின் அவ்வப்போதைய ஆட்சியாளர்களுக்கும், தொடர்வண்டித் துறை சார்ந்த அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும், காயல்பட்டினத்தின் அனைத்து அரசியல் கட்சிகளாலும், பொதுநல அமைப்புகளால் தொடர்ந்து கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையிலும், இன்று வரை எதுவும் செய்யப்படவில்லை.
இதன் காரணமாக, வெளியூர்களுக்கு தொடர்வண்டி மூலம் செல்லும் காயல்பட்டினம், ஆறுமுகநேரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், கூடுதல் பொருட்செலவுகளைச் செய்து, திருச்செந்தூர் தொடர்வண்டி நிலையம் சென்று வண்டி ஏறி வருகின்றனர். இதனால், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தின் வருமானமும் பெருமளவில் குறைந்து போய், அதன் காரணமாகவும் பல்வேறு வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளது.
இக்குறையைப் போக்கிட, ஒன்றிய அரசின் ஆட்சியாளர்களையும், தொடர்வண்டித் துறை அதிகாரிகளையும் வலியுறுத்துவதற்காக, அடுத்து என்ன செய்துகொள்வது என்று தீர்மானிக்கும் வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஒருங்கிணைப்பில், காயல்பட்டினத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக் கமிட்டிகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம், வீரபாண்டியன்பட்டினம், திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள பேர்ள் கார்டன் ரிசார்ட் - பீ.ஜி.ஆர். கேளரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர செயலாளருமான கே.எஸ். முத்து முஹம்மத், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் எம்.கே. முஹ்யித்தீன் தம்பி துரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் எம்.எஸ். நூஹ் ஸாஹிப் உள்ளிட்ட பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ். அபூஸாலிஹ் வரவேற்றார். அதன் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, கூட்ட அறிமுகவுரையாற்றினார். திமுக நகர செயலாளரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான கே.எஸ். முத்து முஹம்மத், அதிமுக நகர செயலாளர் டாக்டர் காயல் மவ்லானா, மதிமுக மாவட்ட பொருளாளர் காயல் அமானுல்லாஹ், அம்மா பேரவை செயலாளர் எல்.எஸ். அன்வர், காங்கிரஸ் நகர தலைவர் அப்துர் ரஹ்மான் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் கா.மை. அல்அமீன், மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் ஏ.பீ.டீ. ஜாஹிர் ஹுசைன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் பன்னீர் செல்வம், அதிமுக (ஓ.பீ.எஸ்.) தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு நகர செயலாளர் தங்கத்தம்பி காதிர் ஸாஹிப், நாம் தமிழர் கட்சியின் ராக் ஸாலிஹ், தமிழக வெற்றிக் கழக செயலாளர் முகைதீன், தேமுதிக அரபி ஹபீபுர் ரஹ்மான், அதிமுக ஆறுமுகநேரி நகர முன்னாள் செயலாளர் அரசகுரு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் ராவன்னா அபுல் ஹஸன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பு மாவட்ட செயலாளர் முத்து கிருஷ்ணன் என்ற கண்ணன், காக்கும் கரங்கள் தலைவர் எம்.ஏ.கே. ஜெய்னுல் ஆப்தீன், காயல் நலன் காப்பகம் தலைவர் எஸ்.எச். அப்துல் மஜீத் இளைஞர் ஐக்கிய முன்னணி இணைச் செயலாளர் ஏ.ஜே. சொளுக்கு, மக்கள் உரிமை நிலைநாட்டல் வழிகாட்டு அமைப்பின் துணைத் தலைவர் ஏ.எஸ். புகாரீ உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : இனியும் தாமதிக்காமல், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய நடைமேடையை போர்க்கால அடிப்படையில் உயர்த்தியும், 24 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நடைமேடையை நீட்டியும் அமைக்க வலியுறுத்தி, நிகழும் ஜனவரி 24ஆம் நாள் மாலையில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் – அனைத்து பொதுமக்களையும் ஒன்றுதிரட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்திடவும்,
அதற்குப் பிறகும் எந்த நடவடிக்கையும் தொடங்கப்படாவிட்டால், வரும் பிப்ரவரி மாதம் 09ஆம் நாளன்று, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைத் திரட்டி, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர், இத்தகவலை அறிவிப்பாக வெளியிட்டார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் எம்.எஸ். நூஹ் ஸாஹிப் நன்றி கூற, சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆ பிரார்த்தனையுடன் கூட்டம் நிறைவுற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்றாஹீம் மக்கீ, திமுக தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஐ. அப்துல் காதர், அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் எம்.ஜெ. செய்யித் இப்றாஹீம், புறநகர் செயலாளர் ரஜினி முருகன், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகளான துணி உமர், வாவு எம்.எம். ஷம்சுத்தீன், ஜெய்ப்பூர் அபூ, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் இப்னு மாஜா, எஸ்.டி.பீ.ஐ. நகர செயலாளர் சல்மான் ஃபாரிஸ், அமமுக நகர செயலாளர் பீ.எஸ். அப்துல் காதர், நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் நோனா ஷேக் முஹம்மத், மக்கள் நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை மாநில செயலாளர் கஃப்பார் ஹஸன், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் நிர்வாகிகளான எஸ். அப்துல் வாஹித், செய்யித் அஹ்மத் யாஸீன், கராத்தே ரஞ்சித், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் எஸ்.கே. ஸாலிஹ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.