» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பணத்தை இரட்டிப்பாக மாற்றித் தருவதாக கூறி ரூ.2.29 கோடி மோசடி: தந்தை - மகன் கைது
சனி 11, ஜனவரி 2025 8:20:30 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் விசேஷ பூஜை செய்து பணத்தை இரட்டிப்பாக மாற்றித் தருவதாக கூறி சுமார் ரூ.2 கோடியே 29 லட்சம் மோசடி செய்த தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் ஓடக்கரை தெருவை சேர்ந்த பிள்ளைமுருகன் மகன் லிங்கராஜ் (42) என்பவர் ஏரல் மெயின் பஜார் பகுதியில் சாமி அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இவரிடம் கடந்த 2018ம் ஆண்டு எட்டயபுரம் புங்கவர்நத்தம் பகுதியை சேர்ந்த அய்யாதுரை மகன் பாலசுப்பிரமணியன் (63) என்பவர் அறிமுகமாகி தான் ஒரு சாமியார் என்றும், தான் அருள் வாக்கு கூறுவதால் புங்கவர்நத்தத்தில் புதிய திருக்கோயில் ஒன்றை நிறுவி உள்ளதாகவும்,
அக்கோவிலில் விஷேச பூஜை செய்து பல பேர்களின் பிரச்சினைகளை முடித்துள்ளதாகவும், பல பேருக்கு பணத்தை இரட்டிப்பு செய்து கொடுத்ததுள்ளதாகவும் நம்பிக்கையான வார்த்தைகளை கூறி தனது மனைவி பாண்டியம்மாள் (57) மற்றும் தனது மகன் அய்யாதுரை (27) ஆகியோரையும் லிங்கராஜிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் அவர்கள் லிங்கராஜுக்கும் பூஜை செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்தால் தொழில் பெரிய அளவில் நடைபெறும் என்றும் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அதை நம்பிய லிங்கராஜ் கடந்த 2018ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை பல்வேறு தவணைகளாக ரூ.38 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.
அதேபோன்று மேற்படி லிங்கராஜின் நண்பரான ஆனந்தகுமார் என்பவரும் ரூ.29 லட்சம் பணத்தையும் மேற்படி எதிரி பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து லிங்கராஜ் மேற்படி பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர்கள் தொலைபேசி எண்ணை அனைத்து விட்டு தலைமறைவாகிவிட்டதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து லிங்கராஜூம் அவரது நண்பர் ஆனந்தகுமார் என்பவரும் எட்டயபுரம், புங்கவர்நதத்திற்கு வந்து அவர்களை பலமுறை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அங்கு விசாரித்ததில் அவர்கள் இவர்களைப் போல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரிடம் ரூ.27 லட்சமும், மாரிமுத்து என்பவரிடம் 10 லட்சமும், இருளப்பன் என்பவரிடம் 7 லட்சமும், எட்டயபுரத்தை சேர்ந்த மாரிகண்ணு என்பவரிடம் 5 லட்சமும், சாந்தி என்பவரிடம் 17 லட்சமும், திண்டுக்கலை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் 10,60,000/-மும், கமலக்கண்ணனிடம் 16 லட்சமும், மாரியம்மாளிடம் ரூ.29,40,000/-மும், திருமலைச்சாமி என்பவரிடம் 40 லட்சம் ரூ.பணத்தையும் சேர்த்து மொத்தம் 2 கோடியே 29 லட்சம்/- பணத்தை ஆசை வார்த்தை கூறியும் நம்பிக்கை ஏற்படுத்தியும் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து லிங்கராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு, மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லெட்சுமி பிரபா தலைமையில் சார்பு ஆய்வாளர் நிவேதா, சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன் ஜோதி மற்றும் தலைமை காவலர் வேல்ராஜ் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு, மேற்படி எதிரிகளில் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் அய்யாதுரை ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.