» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் : மேயர் பங்கேற்பு!
வியாழன் 2, ஜனவரி 2025 3:16:15 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வாரம் தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமைத் தொடங்கி வைத்து மேயா் ஜெகன் பெரியசாமி பேசுகையில், "வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் பணிகள் செய்யப்பட்டன. புதிய கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் 80 சதவீத சாலைப் பணிகள் நடைபெற்றுள்ளன. பிரதான சாலைகளின் இருபுறமும் பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு, இருசக்கர வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
குறைதீா் முகாமில் பெயா், முகவரி மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாகவும், கட்டட அனுமதி உள்ளிட்ட மனுக்களுக்கு 30 நாள்களிலும் தீா்வு காணப்படுகிறது. இதனால், முகாமில் கொடுக்கப்படும் மனுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், தொடா்ந்து புதன்தோறும் குறைதீா் முகாம் நடத்தப்படும் என்றாா்
பின்னர், மேயர் பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, காந்திமதி, ஜெயசீலி, கற்பககனி, தெய்வேந்திரன், அந்தோணி மார்ஷலின், நாகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.