» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கல்வெட்டு: பக்தர்கள் வியப்பு!
சனி 4, ஜனவரி 2025 5:36:23 PM (IST)
திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் கடல் உள்வாங்கி காணப்படும் நிலையில் வெளியே தெரியும் கல்வெட்டை பக்தர்கள் ஆச்சரியமாக பார்வையிட்டு வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளியே சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது. கடந்த 31-ந்தேதி அமாவாசையாக இருந்ததால் 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் சுமார் 4 அடி நீள கல்வெட்டு கிடந்தது. அதில், ‘முனி தீர்த்தம்’ என்றும், ‘இதன் பலன் ஆன்மாக்களை கட்டியிருக்கிற நல்வினை தீவினை ஆகிய இரும்புச் சங்கிலியை தேய்ப்பதற்கு அரத்தை போலிருந்து பலனைக் கொடுக்கும்’ என்றும் பொறிக்கப்பட்டு இருந்தது. அந்த கல்வெட்டினை கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் பாதுகாப்பாக எடுத்து கரையில் வைத்தனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘‘திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலைச் சுற்றிலும் 24 தீர்த்த கிணறுகள் உண்டு. அதனை நாளடைவில் பராமரிக்காததால் பெரும்பாலான தீர்த்த கிணறுகள் தூர்ந்து அழிந்து விட்டன. சில தீர்த்த கிணறுகள் கடலுக்குள் சென்று விட்டன. ஒவ்வொரு தீர்த்தத்திலும் நீராடினால் கிடைக்கும் பலன்கள் பற்றி அங்குள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருந்தன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் மாதா, பிதா தீர்த்தங்கள் என்று குறிப்பிடப்பட்ட 2 கல்வெட்டுகள் கிடைத்தன. அவற்றில் புனித நீராடினால் சொர்க்கம் கிடைக்கும் என்று எழுதப்பட்டு இருந்தது. தற்போது கடல் அலையின் சீற்றம், அரிப்பு காரணமாக, கடலுக்குள் இருந்த தீர்த்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றாக வெளியே தெரிகின்றன. எனவே அனைத்து தீர்த்த கிணறுகளையும் கண்டறிந்து பாதுகாக்க வேண்டும்’’ என்றனர்.
SRI KumarJan 4, 2025 - 09:40:12 PM | Posted IP 172.7*****