» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 14,90,425 வாக்காளர்கள் : இறுதி பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்!
திங்கள் 6, ஜனவரி 2025 4:20:51 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 14,90,425 வாக்காளர்கள் உள்ளனர் என இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் இன்று (06.01.2025) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 01.01.2025 ம் நாளை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025 ல் 29.10.2024 முதல் 28.11.2024 நடைபெற்றதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திடவும், தொகுதி மாற்றிடவும் 38034 மனுக்களும், நீக்கம் செய்திட 13180, மற்றும் திருத்தம்/நகல் அடையாள அட்டை கேட்டு 15773 ஆக மொத்தம் 66987 மனுக்கள் பெறப்பட்டன.
மேற்கண்டவாறு பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு 62368 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று 06.01.2025 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களால் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 728026 ஆண் வாக்காளர்கள் 762166பெண் வாக்காளர்கள் மற்றும் 233 மூன்றாம் பாலினத்தோரை சேர்த்து ஆக மொத்தம் 1490425 வாக்காளர்கள் உள்ளனர்.
புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள 18-19 வயதுடைய வாக்காளர்களுக்கும், முகவரி மாற்றம் காரணமாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கும், நகல் அடையாள அட்டை கோரியவர்களுக்கும் வண்ண வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை விரைவு அஞ்சல் மூலம் இது வரை 16799 அனுப்பபட்டுள்ளது. மீதமுள்ள 33726 நபர்களுக்கு விரைவில் விரைவு அஞ்சல் மூலம் வாக்காளர் அடையாள அட்டை அனுப்பிவைக்கப்படும்.
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத, 18 வயது பூர்த்தியானவர்கள் எண்ணிக்கை வாக்காளர் பட்டியலில் குறைவாகவே உள்ளதால் 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தியான அனைத்து நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனைத்து வேலைநாட்களில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் தேர்தல் அலுவலரிடமிருந்து படிவங்களை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 01.08.2022 முதல் நடைபெற்றுவருகிறது. இப்பணியில் நமது மாவட்டத்தில் 70.52 சதவிகிதம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். மேலும் நகரப்பகுதிகளில் இப்பணி மிக குறைவாகவே உள்ளதால் அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்களது ஆதார் எண்ணை தங்களது பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளித்து வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் இணையதளத்தில் www.voters.eci.gov.in என்ற இணையதள முகவரியிலும், கைபேசியில் Voter Helpline APP (VHA) என்ற செயலியினை பதிவிறக்கம் செய்தும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முகவரி மாற்றம் செய்திடவும் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திடவும் விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பொது மக்கள் தகவல்களை பெறவும் மற்றும் இடர்பாடுகள் இருப்பின் தெரிவிக்கவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய இலவச தொலைபேசி எண் 0461-1950 ல் தொடர்பு கொள்ளலாம். மேலும் தங்கள் பகுதி வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியர் அலுவலகங்களையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, தேர்தல் வட்டாட்சியர் தில்லைபாண்டியன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளான தி.மு.க. சார்பில் எஸ்.ஆர். ஆனந்த சேகரன், ஐ.ரவி, அக்னல், ச.ஆறுமகப்பெருமாள், அ.இ.அ.தி.மு.க. சார்பில் எஸ்.பி.சண்முகநாதன், ஏ.சந்தானம், எம்.முனியசாமி, பி.சரவணபெருமாள், என்.ஜி.ராஜேந்திரன், என்.சின்னத்துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எஸ்.மாடசாமி, எஸ்ஆர். ஞானசேகர், பி.ஜே.பி. சார்பில் எல்.கிஷோர்குமார், சிபிஐஎம் சார்பில் தா.ராஜா, காங்கிரஸ் சார்பில் ஆர்.முத்துமணி, தே.மு.தி.க. என்.நாராயணமுத்து, பிஎஸ்பி சார்பில் கே.ராமையாகுமார், ஆம் ஆத்மி சார்பில் வே.குணசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.