» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறந்த நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு பரிசு, சான்றிதழ் : ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
திங்கள் 6, ஜனவரி 2025 4:39:01 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட அளவில் சிறந்த நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு பரிசுத் தொகைக்கான காசோலைகள் மற்றும் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 322 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 18 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, திங்கள் கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் பொதுவிநியோகத்திட்டம் சீராக செயல்படுவதில் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இவர்களின் சிறந்த பணியினை ஊக்குவிக்கும் விதமாக பரிசுத்தொகை மற்றும் நற்சான்றிதழ் ஆகியவை வழங்கி அங்கீகரிப்பதன் மூலம் அவர்களின் செயல்திறனையும், ஈடுபாட்டினையும் மேம்படுத்தலாம் என்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையிலும் பணிபுரியும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 2023-2024ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் சிறந்த விற்பனையாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சாத்தான்குளம் அமுதம் நியாயவிலைக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வரும் கே.மதிவாணன் அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.4000க்கான காசோலை மற்றும் நற்சான்றிதழையும், போலையார்புரம் கூட்டுறவு நியாயவிலைக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்துவரும் ஜெ.அந்தோணி அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.3000க்கான காசோலை மற்றும் நற்சான்றிதழையும், அதேபோல, மாவட்ட அளவில் சிறந்த கட்டுநர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள செட்டியாபத்து நியாயவிலைக் கடையில் கட்டுநராகப் பணிபுரிந்து வரும் பி.முருகேசன் அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000க்கான காசோலை மற்றும் நற்சான்றிதழையும், கலியாவூர் அமுதம் நியாயவிலைக் கடையில் கட்டுநராகப் பணிபுரிந்து வரும் ஜி.சங்கரசுப்பு அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.2000க்கான காசோலை மற்றும் நற்சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கி பாராட்டினார்.
மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் அரசு மாணவர்கள் விடுதியில் காலியாகவுள்ள சமையலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 41 நபர்களுக்கு சமையலர் பணிக்கான பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.