» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழர் திருநாள் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் : வேட்டி, சேலை அணிந்து உற்சாகம்!!
சனி 4, ஜனவரி 2025 4:38:10 PM (IST)
தூத்துக்குடி அருகே சாயர்புரத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகள் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, சேலை அணிந்து மண்பானையில் பொங்கலிட்டு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
தமிழகத்தில் டிராவல் இந்தியா என்ற அமைப்பு மூலம் ஆண்டுதோறும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆட்டோ ரிக்க்ஷா மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் தமிழர்களின் பெருமைகள் மற்றும் கோவில்களை சுற்றி பார்ப்பதுடன் ஏழை பள்ளி மாணவர்களுக்கு கட்டிடம் மற்றும் கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்தாண்டு கடந்த 28ஆம் தேதி சென்னையில் துவங்கிய இவர்கள் பயணம் பாண்டிச்சேரி, தஞ்சாவூர், மதுரை, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று விட்டு இன்று தூத்துக்குடி சாயர்புரம் அருகே உள்ள பிரம்மஜோதி என்ற பண்ணை தோட்டத்திற்கு வந்தனர். இந்த ஆட்டோ ரிக்க்ஷா குழுவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, சிலி, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 16 ஆண்களும் 5 பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.
சாயர்புரம் பண்னை தொட்டத்திற்கு வந்த இவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஆண்களுக்கு வேஷ்டி துண்டு பெண்களுக்கு பாரம்பரிய முறைப்படி சேலை சட்டை வழங்கப்பட்டு தமிழர்களின் பாரம்பரிய உடையில் பொங்கல் வைப்பது குறித்து விளக்கப்பட்டது.
பின்னர் வேஷ்டி, துண்டு, சேலைகளை அணிந்து வந்த வெளிநாட்டினர் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பனை ஓலை வைத்து பச்சரிசி வெல்லம் நெய்யிட்டு சர்க்கரை பொங்கலை வைத்தனர். பொங்கல் பொங்கி வரும்போது குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என உற்சாகமாக குலைவையிட்டனர். பின்னர் தயார் செய்யப்பட்ட பொங்கலை அலங்கரித்து வைத்தனர். இதில் சிறந்த பொங்கலுக்கான பரிசை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோடியினர் வென்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை தாங்கள் இங்கு கொண்டாடியது தங்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாட்டில் ஆட்டோ மூலம் தாங்கள் சுற்றுப்பயணம் சென்று செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்திய மக்கள் மிகவும் அன்பானவர்கள் என தெரிவித்தனர். மேலும் இந்த சுற்றுப்பயணத்தில் கிடைக்கும் ஒரு தொகை ஏழை குழந்தைகளின் கல்விக்காக செயல்படுத்தப்படுகிறது.