» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினம்: கடற்கரையில் மலர்தூவி மீனவர்கள் அஞ்சலி
வெள்ளி 27, டிசம்பர் 2024 8:22:26 AM (IST)
தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி, திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கடந்த 26.12.2004இல் சுனாமி தாக்கியதில் தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் கடற்கரை பகுதியில் சுமார் 2 லட்சம் பேர் உயிரிழந்தனர். படகுகள் உள்ளிட்ட உபகரணங்களை இழந்து மீனவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர்.
இந்த பேரழிவு நிகழ்ந்து 20 ஆண்டுகள் ஆன நினைவு தினம் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்களால் நேற்று அனுசரிக்கப்பட்டது. சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்திருந்தனர்.
மேலும், அவர்களுக்காக திரேஸ்பரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி, இனிமேல் இதுபோன்ற பேரழிவு வரக்கூடாது என ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கடல் மற்றும் மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென பிரார்த்தனையில் ஈடுபட்டு, கடல் மாதாவிற்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினர்.
இந்நிகழ்வில், பரதவர் முன்னேற்ற பேரவை மாவட்ட இளைஞர் அணித் தலைவர் பாலன், அண்ணா சங்குகுளி சங்கத் தலைவர் இசக்கிமுத்து, துணைத் தலைவர் மாரி லிங்கம், பொருளாளர் விமர்சன், ஆலோசகர் பாத்திமா பாபு, செயலர் முருகையா உள்பட மீனவர்கள் பலர் பங்கேற்றனர்.