» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் உள்பட 2 பேர் மீது போக்சோ வழக்கு!
செவ்வாய் 14, ஜனவரி 2025 9:29:24 AM (IST)
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் ஆசிரியர் உள்பட 2 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தூத்துக்குடி அருகே உள்ள ரத்தினபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (51). இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தனது வீட்டில் வைத்து டியூசன் நடத்தி வந்தாா். அப்போது, சில மாணவர்களுக்கு ஆரோக்கியராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அமல்ராஜிடம் தெரிவித்தனர். ஆனால் அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு மாணவன் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், ஆசிரியர் ஆரோக்கியராஜ், தலைமை ஆசிரியர் அமல்ராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.