» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வரதட்சனை கொடுமையால் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 22, டிசம்பர் 2024 8:30:34 PM (IST)
தூத்துக்குடியில் வரதட்சனை கொடுமையால் 4 மாத கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி கேவிகே நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ண பெருமாள் மனைவி முத்தாரம்மாள் (21), இந்த தம்பதிக்கு கடந்த மார்ச் மாதம் திருமணமானது. திருமணத்திற்கு பின் முத்தாரம்மாள் மாமனார் - மாமியார் உடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். தற்போது முத்தாரம்மாள் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் அவரை கணவர் கிருஷ்ண பெருமாள் அவரது தாயார் லட்சுமி, மற்றும் தகப்பனார் ஆகியோர் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தினார்களாம். இது சம்பந்தமாக முத்தாரம்மாள் தனது தகப்பனாரிடம் கூறவே, அவர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே இன்று முத்தாரம்மளிடம் மீண்டும் வரதட்சனை கேட்டு கொடுமை செய்து, "போலீசில் எப்படி புகார் செய்யலாம் என்று அவரை சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த முத்தாரம்மாள் இன்று மாலை வீட்டில் படுக்க அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், டவுன் ஏஎஸ்பி மதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக ஏஎஸ்பி மதன் வழக்கு பதிவு செய்தார். முத்தாரம்மாளுக்கு திருமணம் ஆகி 9 மாதங்கள் ஆவதால் தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு விசாரணை நடத்தி வருகிறார்.