» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் தபால்காரருக்கு கொலை மிரட்டல் : வாலிபர் கைது!
செவ்வாய் 3, டிசம்பர் 2024 9:08:43 PM (IST)
சாத்தான்குளம் அருகே திருமணம் செய்து கொள்ளவில்லையெனில் கொலை செய்து விடுவதாக பெண் தபால்காரருக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் குற்றாலம் பிள்ளை ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் மகள் அனுசியா (22). இவர் சாத்தான்குளம் அருகே கலுங்குவிளை கிளை அஞ்சலகத்தில் தபால் காரராக பணி புரிந்து வருகிறார். இவரும், அவரது உறவினராக முடிவைத்தானேந்தல் பாலையா கணக்கு பிள்ளை தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் கணேச பொருமாள் (22) என்பவரும் ஒரு வருடமாக பழகி வந்ததாகவும், கணேச பெருமாள் நடவடிக்கை சரியில்லாததால் அனுசியா, பேசாமல் விலகி இருந்துள்ளார்.
அவர் அனுசியாவிடம் தொந்தரவு செய்து வந்ததால். அனுசியா தந்தை ராமசுப்பிரமணியன், புதுகோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து. போலீசார் கணேசபெருமாளை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் கணேச பெருமாள், இன்று கலுங்குவிளை வந்து அனுசியாவிடம், அவரிடம் பேச சொல்லி கட்டாயப்படுத்தியும், திருமணம் செய்து கொள்ளவில்லையெனில் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அனுசியா சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் வழக்கு பதிந்தார். உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி கணேசபெருமாளை கைது செய்தார்.