» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்... எஸ்பிக்கு கோரிக்கை!!
புதன் 4, டிசம்பர் 2024 12:47:58 PM (IST)
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என எஸ்.பி.,க்கு 34வது வார்டு கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி 34வது வார்டு உறுப்பினர் சந்திரபோஸ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு விடுத்துள்ள மனுவில் "தூத்துக்குடி மாநகராட்சி மத்தியில் இருக்கும் பக்கிள் ஓடை கால்வாய் தெற்கு பக்கம் தென்பாகம் காவல்நிலையமும் பக்கிள் ஓடையின் வடக்கு பக்கம் சிப்காட் காவல் நிலையமும் உள்ளது.
சிப்காட் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியானது தட்டப்பாறை முதல் எட்டையாபுரம் ரோடு, ஹவுசிங் போர்டு வரை பெரிய காவல்நிலைய எல்கையாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சமூக விரோத செயல்கள் நடக்கும்பொழுது புகார் அளிக்க சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிப்காட் காவல்நிலையத்திற்கு செல்லவேண்டிய நிலை உள்ளது. இரவு நேரத்தில் புகார் அளிக்க இயலாத நிலை உள்ளது.
கடந்த வாரத்தில் எனது 34வது வார்டுக்குட்பட்ட அசோக் நகர் பகுதியில் பூட்டிக்கிடந்த வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றது. எனவே, சிப்காட் காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து அசோக் நகரிலோ, அல்லது தபால் தந்தி காலனி 2வது தெருவிலோ காவல் நிலையம் அமைக்க இடம் உள்ளது.
எனவே, அங்கே காவல் நிலையம் அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் அல்லது ஓடைக்கு வடக்குப் புறம் உள்ள பசும்பொன் நகர், அல்லது தபால் தந்தி காலனி, அசோக் நகர், ராஜீவ்நகர், மில்லர் புரம் ஹவுசிங் போர்டு, பால்பாண்டி நகர், பர்மா காலனி, மகிழ்ச்சிபுரம் ஆகிய பகுதிகளை தென்பாகம் காவல் நிலையத்தோடு இணைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.