» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபர் கொலை சம்பவத்தைக் கண்டித்து கடைகள் அடைப்பு : உடலை உறவினர்கள் வாங்க மறுப்பு!
புதன் 4, டிசம்பர் 2024 12:56:52 PM (IST)
தூத்துக்குடி அருகே வாலிபர் கொலை சம்பவத்தைக் கண்டித்து கூட்டாம்புளி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளி பொன்நகரை சேர்ந்தவர் வெள்ளக்கண்ணு (23). இவரது தந்தை முருகேசன் கூட்டாம்புளி பிரதான சாலையில் இரும்பு கடை நடத்தி வருகிறார். வெள்ளக்கண்ணுவுக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்த அவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், ரூரல் டி.எஸ்.பி. சுதிர், இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வெள்ளக்கண்ணுவை கொலை செய்த கும்பல் யார்? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொலை வழக்கில் சம்பந்தபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்துள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. வெள்ளக்கண்ணு வீட்டு முன்பு ஏராளமான உறவினர்கள் திரண்டு நிற்பதால் அவர்கள் வீட்டை சுற்றி போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.