» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போதை பொருள் கடத்தல் வழக்கில் 8பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
புதன் 4, டிசம்பர் 2024 3:25:11 PM (IST)
தூத்துக்குடியில் போதை பொருள் கடத்தல் வழக்கில் 8பேருக்கு தலா 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையிலிருந்து கடந்த 2022ஆம் ஆண்டு 9.985 கிலோ கிரிஸ்டல் மெத்தம் பெட்டமைன் என்ற போதை பொருளை இலங்கைக்கு கடத்த முயன்றதாக தூத்துக்குடி மாவட்டம்,கீழ வைப்பார் கிரிடோவாஸ் மகன் இருதயவாசு (43), ஆண்டனி மகன் கிங்பன் (25), தொம்மை குத்தாலம் மகன் சிலுவை (44), ராஜு மகன் அஸ்வின் (26), ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தங்கச்சிமடம் ஆல்வின் மகன் வினிஸ்டன் (25), கீழ வைப்பார் ஜெபமாலை மகன் சுபாஷ் (26), சிலுவை மகன் கபிலன் (22), செர்லி மகன் சைமன் என்ற முத்து (29) ஆகியோரை தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு மதுரை முதன்மை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்து நீதிபதி எம்.செங்கமலசெல்வம், குற்றம்சாட்டப்பட்ட 8பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.1லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் தங்கேஸ்வரன் ஆஜரானார்.