» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வங்கதேச ஹிந்துக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் : 40 பெண்கள் உள்பட 300 பேர் கைது
புதன் 4, டிசம்பர் 2024 12:40:09 PM (IST)
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்திய 40 பெண்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
வங்காளதேச நாட்டில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து அங்கு சிறுபான்மை மக்களான இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த நாட்டில் உள்ள இந்து கோயில்கள் சேதப்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்து மக்களுக்கு குரல் கொடுக்கும் மத தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் வங்கதேச அரசைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் வங்கதேச ஹிந்துக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி தூத்துக்குடி டிவிடி சிக்னல் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார், மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி கொடுக்காததால் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 40 பெண்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.