» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பெண் எஸ்ஐ-யை அரிவாளை காட்டி கொலை மிரட்டல்: 2 வாலிபர்கள் கைது
செவ்வாய் 3, டிசம்பர் 2024 8:32:13 AM (IST)
தூத்துக்குடியில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் அரிவாளை காட்டி கொலைமிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில், தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜகீதா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, முத்தையாபுரத்தில் உள்ள ஒரு கடை அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அந்த 2 பேரையும் அழைத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரிக்க முயன்றார். உடனடியாக அவர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் மறைத்து வைத்து இருந்த அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.
இதை தொடர்ந்து அவருடன் ரோந்துபணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் முத்தையாபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (29) மற்றும் மகாராஜா என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.