» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.40 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் : 3 பேர் கைது
செவ்வாய் 3, டிசம்பர் 2024 8:14:09 AM (IST)
தூத்துக்குடி அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே பட்டினம்மருதூர் கடற்கரைப் பகுதியில் தருவைகுளம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்த முயன்றனர். போலீசாரைப் பார்த்ததும் ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். அந்த லாரியில் இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக பீடி இலைகள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து ரூ. 40 லட்சம் மதிப்பிலான சுமார் 1.6 டன் பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, லாரியிலிருந்த தாளமுத்துநகர் பாரதி நகரைச் சேர்ந்த நாகூர்கனி (31), பிரசாந்த் (44), ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம் (29) ஆகிய 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.