» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபரை அரிவாளால் தாக்கிய 2 சிறார்கள் உள்ளிட்ட 5 பேர் கைது
செவ்வாய் 3, டிசம்பர் 2024 8:03:28 AM (IST)
காயல்பட்டினத்தில் கஞ்சா விற்றதை போலீசாரிடம் காட்டி கொடுத்தால் வாலிபரை அரிவாளால் தாக்கிய 2 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் உச்சினி மாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சேவியர் மகன் ஜெபசெல்வம் (27). இவர், கடந்த நேற்று முன்தினம் ஆறுமுகனேரி முத்துகிருஷ்ணாபுரம் விலக்கு அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரை 5 பேர் வழிமறித்து, ‘கஞ்சா விற்றதை போலீசாரிடம் ஏன் காட்டிக் கொடுத்தாய்?’ எனக் கேட்டு தாக்கினராம்.
மேலும், அவர்களில் ஒருவர் ஜெபசெல்வத்தின் கழுத்தில் அரிவாளால் வெட்ட முயன்றாராம். அதைத் தடுத்தபோது ஜெபசெல்வத்தின் கையில் வெட்டு விழுந்தது. அவ்வழியே சென்றோர் இதைப் பார்த்து சப்தம் போடவே, 5 பேரும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினர்.
இதில், காயமடைந்த ஜெபசெல்வம் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன் வழக்குப் பதிந்தார். ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் விசாரணை மேற்கொண்டார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டது, ஆறுமுகனேரி கமலா நேரு காலனி கோபால் மகன் சஞ்சய்குமார் (20), ராஜமன்னியபுரம் மிஷன் கோயில் தெரு சூசைராஜ் மகன் அந்தோணி பிரதீப் (21), பஜனை கோயில் தெரு காசி மகன் மணிகண்டன் (43), 17 வயது சிறுவர்கள் இருவர் என்பதும், ஜெபசெல்வத்தை அரிவாளால் வெட்டியது சஞ்சய்குமார் என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில், சஞ்சய்குமார், அந்தோணி பிரதீப் ஆகியோர் மீது கஞ்சா விற்பனை, அடிதடி, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்..