» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இரசாயன நிறுவனத்திற்கு இமெயில் அனுப்பி ரூ.20 லட்சம் மோசடி: உத்திரப்பிரதேச வாலிபர் கைது!
ஞாயிறு 24, நவம்பர் 2024 7:50:54 PM (IST)
தூத்துக்குடியில் இரசாயன உற்பத்தி நிறுவனத்திற்கு போலி இமெயில் மூலம் மெசேஜ் அனுப்பி ரூ.20 லட்சம் பணம் மோசடியில ஈடுபட்ட உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் இரசாயன உற்பத்தி நிறுவனத்திற்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மூலம் மூலப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்படி ஒடிசா மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திலிருந்து வருவதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இரசாயன உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் நிதித்துறை பொது மேலாளருக்கு இமெயில் மூலம் மெசேஜ் அனுப்பி ரூபாய் 20 லட்சம் பணத்தை அனுப்புமாறும், எப்போதும் அனுப்பும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்ப வேண்டாம் என்றும் மற்றொரு வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துமாறும் இமெயில் அனுப்பி உள்ளனர்.
இதனை நம்பி மேற்படி இரசாயன உற்பத்தி நிறுவனத்தின் பொது மேலாளர் அந்த வங்கி கணக்கிற்கு ரூபாய் 20 லட்சம் பணத்தை கடந்த 07.10.2024 அன்று அனுப்பி உள்ளார். ஆனால் இதுகுறித்து ஒடிசாவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது பணம் வரவில்லை என்று கூறியுள்ளனர். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி போதுமேலாளர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.
மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) எடிசன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சோமசுந்தரம் தலைமையில் சார்பு ஆய்வாளர் சுதாகரன், தலைமை காவலர் காளிதாஸ், முதல் நிலைக் காவலர் பேச்சிமுத்து, காவலர்கள் புகழேந்திரன், எடிசன் மற்றும் புவனேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த எதிரிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் உத்திரபிரதேசம் மாநிலம் இட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த விஜேந்திரசிங் மகன் மோகித் பாரிக்கர் (26) என்பவர் மேற்படி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி போலீசார் உத்திரபிரதேச மாநிலம் சென்று எதிரி மோகித் பாரிக்கரை கைது செய்து அவரிடம் இருந்த ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்று தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிதி மற்றும் கணக்குகளை கையாளும் மேலாளர்களுக்கு போலி ஈமெயில் பண மோசடியில் ஈடுபடுவது தற்போது நடந்து வருகிறது. இதுபோன்று வரும் இமெயில்களை நம்பி பணத்தை அனுப்ப வேண்டாம் என்றும், சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.