» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிள்ளைகளுக்கு குடும்ப பொறுப்புகளை சொல்லி வளர்க்க வேண்டும் : அமைச்சர் பி.கீதாஜீவன் பேச்சு

வெள்ளி 18, அக்டோபர் 2024 9:58:56 AM (IST)



பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகளுக்கு குடும்ப பொறுப்பினையும், சமூக பொறுப்பினையும் சொல்லி வளர்க்க வேண்டும் என அமைச்சர் பி.கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், நாகலாபுரத்தில் உள்ள தேனம்மாள் முதியோர் இல்லத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தின விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தலைமையில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்ததாவது: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் நாள் சர்வதேச முதிர்யோர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அக்டோபர் மாதம் முழுவதும் முதியோர் தின விழா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இன்றைய தினம் விளாத்திகுளம் வட்டம் நாகலாபுரத்தில் அமைந்துள்ள தேனம்மாள் முதியோர் இல்லத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கொண்டாடப்படும் சர்வதேச முதியோர் தின விழாவில் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பாடல் பாடி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கக்கூடிய உங்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகளுக்கு குடும்ப பொறுப்பினையும், சமூக பொறுப்பினையும் சொல்லி வளர்க்க வேண்டும். முதியோர்களை வாழ் நாள் முழுவதும் பாதுகாத்து அரவணைத்துச் செல்ல வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை என்பதை உணர்த்த வேண்டும். சிறுவயதில் இருந்து நம்மையெல்லாம் பார்த்து பார்த்து வளர்த்த பெற்றோர்களை பாதுகாத்து, பராமரித்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை என்பதை எடுத்துரைக்கும் விதமாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் மாணவர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சமுதாயத்தில் முதியோரை காக்க வேண்டியது நமது கடமை என்பதை அனைவருக்கும் உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். முதியோர்கள் அனுபவத்தில் உயர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆகையால் இளைஞர்கள் ஒவ்வொருவரும் மூத்த குடிமக்களின் அனுபவத்தை பின்பற்றி தங்களது வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு உரிமைச் சட்ட விதியை உருவாக்கிய அரசு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அரசு. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் பிரசித்திபெற்ற திருத்தலங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் கூடுதலாக முதியோர்களை பாதுகாத்து பராமரிப்பதற்கு ஏதுவாக புதிய தொண்டு நிறுவனங்கள் தொடங்குவதற்கு அரசு நிதியுதவி அளித்து தொண்டுநிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது. 

முதியோர்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1000 உதவித் தொகையை 1200 ரூபாயாக உயர்த்தி வழங்கிய அரசு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு. இவ்வாறு முதியோர்களின் நலன் காத்திடவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், அவர்களுக்கு உறுதுணையாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார்கள். 

அதனைத்தொடர்ந்து, சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மூத்த குடிமக்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் பரிசு பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட சமூகநல அலுவலர் பெ.பிரேமலதா, தமிழ்நாடு மூத்த குடிமக்கள் நல உரிமைச் சங்க மாநில துணைத் தலைவர் ஜ.எஸ். மாசிலாமணி, தேனம்மாள் முதியோர் இல்ல மேலாளர் பி. சேகர், புதூர் பேரூராட்சி மன்றத் தலைவர் வனிதா, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory