» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருக்குர்ஆன் முழுவதையும் 3 மாதங்களில் எழுதி காயல்பட்டினம் இளம்பெண் சாதனை!

செவ்வாய் 23, ஜூலை 2024 11:06:44 AM (IST)



மூன்றே மாதங்களில் திருக்குர்ஆன் முழுவதையும், கைகளாலேயே எழுதி சாதனை படைத்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த இளம்பெண் கே.எம்.ஏ. கதீஜா ஷரீஃபா. கத்தீபு சுல்தான், எம்.கே.எஸ். கதீஜா உம்மா தம்பதியின் மகன் வழிப் பேத்தியும், எம்.எல். மீரா சாஹிப், கத்தீபு மர்யம் பீவி தம்பதியின் மகள் வழிப் பேத்தியும், கே.எஸ். முஹம்மத் அபூபக்கர் (தொடர்பு எண்: +91 97912 21161), எம்.எஸ். பீவி ஃபாத்திமா தம்பதியின் மகளுமான இவர் பிஎஸ்சி பட்டதாரியும், மார்க்கம் கற்ற ஆலிமாவும் ஆவார். தான் பயின்ற முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப் பிரிவில் பகுதிநேர ஆசிரியராகச் சேவையாற்றி வரும் இவர், திருமறை குர்ஆன் முழுவதையும் மூன்றே மாதங்களில் தனது கைகளால் அழகுற எழுதி, ஆறு பாகங்களாகப் பிரித்து பைண்டிங் செய்து, நூல் வடிவில் காட்சிப்படுத்தியுள்ளார்.

இவரது இந்தச் சாதனையை முன்னிட்டு, 22.07.2024. திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், காயல்பட்டினம் நெய்னார் தெரு அல்ஹாஜ் எஸ்.ஐ. காதர் தோட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நகரத் தலைவர் எம்.எஸ். நூஹ் சாஹிப் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். திராவிட முன்னேற்றக் கழக தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஐ. காதர் அனைவரையும் வரவேற்றார். திருமறை குர்ஆனை கைகளால் எழுதி சாதனை புரிந்த கே.எம்.ஏ. கதீஜா ஷரீஃபாவைப் பாராட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் பரிசு வழங்கப்பட்டது. 

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாநில பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் அப்பரிசை சாதனைப் பெண்ணின் தந்தை கே.எஸ். முஹம்மத் அபூபக்கரிடம் வழங்க, நகரத் தலைவர் அவருக்குப் பயனாடை அணிவித்து கண்ணியப்படுத்தினார். காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியின் கதீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் நிறுவனரும், சாதனைப் பெண்ணின் ஆசிரியருமான மவ்லவீ எச்.ஏ. அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ - முற்கால வரலாற்றுச் சான்றுகளை விளக்கி, அதன் நீட்சியாக இன்று தனது மாணவி அதேபோல முழு குர்ஆனையும் தன் கைகளால் எழுதி முடித்து நூல் வடிவில் காட்சிப்படுத்தியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது என்று வாழ்த்திப் பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கவுரவ ஆலோசகர் எம்.கே. முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, காயல்பட்டினம் நகர நிர்வாகிகளான எம்.ஏ. முஹம்மத் ஹஸன், முஜீப், என்.டீ. அஹ்மத் ஸலாஹுத்தீன் உள்ளிட்டோர் இதன்போது உடன் இருந்தனர்.

தனது சாதனை குறித்து கே.எம்.ஏ. கதீஜா ஷரீஃபா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரபி மொழி மீதும், திருமறை குர்ஆன் மீதும் எனது பள்ளிப் பருவம் தொடங்கி இன்று வரை எனக்கு நீங்காத ஆர்வம் தொடர்ந்து இருந்து வருகிறது... அதனாலேயே எனது பள்ளி மேல்நிலை வகுப்புகளில் முதன்மொழியாக அரபியைத் தேர்வு செய்தேன். காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியில் மாணவியாகப் பயின்றபோதுதான் திருக்குர்ஆனை முழுவதுமாக எனது கையால் எழுதி முடிக்க வேண்டும் என்ற வேட்கை என்னுள் வேரூன்றியது.

நீண்ட காலமாக அதற்கான செயலில் இறங்க நினைத்தும் எனக்குச் சரியான சூழல் அமையவில்லை. இந்நிலையில், என் தந்தை, தாய், தங்கை, என் சாச்சி (தாயின் இளைய சகோதரி) ஆகியோர் அவரவர் தகுதிக்கேற்ப என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, முழு ஒத்துழைப்பளித்ததால், மூன்றே மாதங்களில் முழு குர்ஆனையும் என் கைகளால் எழுதி முடித்து, கடந்த ரமழான் மாதத்தில், திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட 27ஆம் நாளில், அதை நூல் வடிவில் என் தந்தை கைகளில் சமர்ப்பித்ததை என்னால் மறக்கவியலாது.

எழுதி முடித்த எனக்கு, அதை முழுமையாக மனனம் செய்து முடிக்கவும் பேராவல் உள்ளது... அது விரைவில் நிறைவேற நீங்கள் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுகிறேன் என்றார்.வரும் ஜூலை 25 அன்று திருமணமாகவுள்ள நிலையில், தான் எழுதிய குர்ஆன் பிரதிகளை தன் வருங்காலக் கணவருக்குத் திருமணப் பரிசாக வழங்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


மக்கள் கருத்து

என்னது அது ?Jul 23, 2024 - 06:43:55 PM | Posted IP 172.7*****

ஒண்ணுமே புரியமாட்டீங்குது .. அல்லாவுக்கு அரேபிய மொழி மட்டும் தெரியுமா ? பிற மொழி எல்லாம் தெரியாதா? தமிழ்ல எழுத வேண்டியது தானே .

A R.Fathima RilwanaJul 23, 2024 - 04:23:04 PM | Posted IP 172.7*****

மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் 🤲🏻🤲🏻🤲🏻🌹🌹🌹 Happy Married Life 😍❤️🤍

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory