» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு : உயர்நீதிமன்றம் அதிரடி!

செவ்வாய் 2, ஜூலை 2024 7:56:48 AM (IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு பொதுமக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

பின்னர், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக் கொண்டு, அந்த வழக்கை முடித்து வைத்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஹென்றி திபேன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்த தூத்துக்குடி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும்படி உத்தரவிட்டது யார்?. இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பு ஏற்க போகிறீர்கள்?'' என்று லிங்க திருமாறன் தரப்பில், மனித உரிமை ஆணைய சட்டத்தின்படி ஏற்கனவே முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது'' என்று வாதிடப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர், ‘‘துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் திருமலை என்ற காவல்துறை அதிகாரியை மட்டும் வழக்கில் சேர்த்துள்ளது. துப்பாக்கிச் சூடு குறித்து நீதி விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது. 

ஆனால், அந்த அறிக்கை மீது அரசு இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனித உரிமை ஆணைய சட்டத்தின்படி மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும். அந்த வகையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க எந்த தடையும் இல்லை'' என்று வாதிட்டார்.

சி.பி.ஐ. தரப்பில், ‘இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுரையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கை சிறப்பு கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்தநிலையில், வழக்கைத் தொடர மனுதாரருக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை' என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘ஸ்டெர்லைட்டுக்காக போராட்டம் நடத்திய அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. 13 பேர் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். நடந்த இந்த துயர சம்பவத்துக்காக எந்தவொரு அதிகாரியும் இதுவரை வருந்தியதாக தெரியவில்லை. துப்பாக்கிச்சூட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகள் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்'' என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள், ‘பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும்படி உத்தரவிட்டது யார்?. இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பு ஏற்க போகிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பினர். ‘‘இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் தெரிவிக்கும் எதிர்ப்புக்கு, மனுதாரர் பதில் அளிக்க வேண்டும். விசாரணையை 15-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory