» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அரசு நலத்திட்ட உதவிகள் : கனிமொழி எம்பி வழங்கினார்

வியாழன் 10, ஏப்ரல் 2025 3:10:23 PM (IST)



தூத்துக்குடியில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கனிமொழி கருணாநிதி எம்பி பயனாளிகளுக்கு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின்கீழ் செயல்பட்டுவரும் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி சுகாதார மாவட்டங்களில் உள்ள 180 நலவாழ்வு மையங்களுக்கான மருத்துவ உபகரணங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 66 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.67,18,800 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 93 பயனாளிகளுக்கு ரூ.54,02,670 மதிப்பிலான வரன்முறை பட்டாக்களையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழகத்தில் வாழ்கின்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறார்கள். அந்த வகையில் இன்றையதினம் மாற்றுத்திறனாளிகளின் நலன்காக்கும் வகையில் 66 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.67,18,800 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பித்துள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவிலேயே அடுத்தகட்டமாக வழங்கப்படவுள்ளது. உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் தான் மாற்றத்திறனாளிகளுக்கென தனியாக ஒரு துறை உருவாக்கப்பட்டு, அவர்களுடைய நேர்வழி பார்வையிலே செயல்பட்டு வந்தது. அதே வழியில் இன்று நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் தன்னுடைய நேரடி பார்வையிலே மாற்றுத்திறனாளிகளுக்கான அந்த துறையை இன்று நிருவகித்து வருகிறார்கள். 

அதேபோல, மாற்றுத்திறனாளிகள் அவர்களுடைய அத்தனை கோரிக்கைகளையும் தொடர்ந்து நிறைவேற்றி, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கக்கூடிய அரசு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளோர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் நீண்ட நாட்களாக குடியிருப்போர்களின் நீண்டநாள் கோரிக்கையாக நீண்டநாள் கனவாக இருக்கக்கூடிய அந்த பட்டா பெறுவதை இன்று நிஜமாக்கிகொண்டிருக்கிறார்கள்.

அந்த அடிப்படையிலேயே இன்று கிட்டதட்ட 93 பயனாளிகளுக்கு வரன்முறை பட்டாக்கள் வழங்கப்படவுள்ளது. மேலும், தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி சுகாதார மாவட்டங்களில் உள்ள 180 நலவாழ்வு மையங்களுக்கு கனிமவள நிதியிலிருந்து ரூ.2,00,28,944/- மதிப்பில் தானியங்கி பகுப்பாய்வுக் கருவி, நெபுலைசர், இரத்த அழுத்த மானி, மைய விலக்கு சுழற்சிக் கருவி, ஹீமோகுளோபினோ மீட்டர், குளிர்சாதனப் பெட்டி, மருத்துவப் பெட்டி, தள்ளுவண்டி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுகிறது. நலவாழ்வு மையங்களில் பணிபுரியக்கூடிய அனைத்து இடைநிலை சுகாதார செவிலியர்களுக்கு மருத்துவ உபகரணங்களை முறையாக பயன்படுத்துவது தொடர்பாக பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

அதுபோன்று, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பேசும்போது குறிப்பிட்டு சொன்னது போல உங்களிடம் இந்த கருவிகள் எல்லாம் ஒப்படைக்கப்படும். அதை நிச்சயமாக நீங்கள் நல்ல முறையிலே பராமரித்து முறையாக பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் கடந்த வருடம் மழை வெள்ளத்தின்போது இங்கு இருக்கக்கூடிய செவிலியர்கள் எந்த அளவிற்கு செயல்பட்டு நலவாழ்வு மையங்களில் இருக்கக்கூடிய அந்த மருத்துவக் கருவிகளை எல்லாம் மழை வெள்ளத்திலிருந்து பாதுகாத்து வைத்தார்கள்.

அதேபோல, அந்த நேரத்தில் அங்கே வந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எவ்வாறு ஒரு சிறப்பான மகப்பேறு சிகிச்சை அளித்தார்கள் என்ற வரலாறு நமது தூத்துக்குடிக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதனால் நிச்சயமாக நீங்கள் இதன்வழியாக இன்னும் அதிகமானவர்களுக்கு பயன்படக்கூடிய வகையிலே இதை எல்லாம் பயன்படுத்தலாம். 

மேலும், மக்களுக்கு சிறப்பான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற நோக்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட சுகாதார அலுவலரும் கலந்தாலோசித்து முக்கியமான மருத்துவ உபகரணங்களை தேர்வுசெய்து வாங்கிக் கொடுத்துள்ளார்கள். இந்த மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிச்சயமாக மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும், உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக மாவட்டத்தில் உள்ள 180 நலவாழ்வு மையங்களுக்கு கூடுதலாக தானியங்கி பகுப்பாய்வுக் கருவி, நெபுலைசர், இரத்த அழுத்த மானி, மைய விலக்கு சுழற்சிக் கருவி, ஹீமோகுளோபினோ மீட்டர், குளிர்சாதனப் பெட்டி, மருத்துவப் பெட்டி, தள்ளுவண்டி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் கனிமவள நிதியிலிருந்து ரூ.2,00,28,944/- மதிப்பில் வழங்கப்படுகிறது. 

இதன்மூலம் நலவாழ்வு மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கக் கூடிய மக்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவமும், கல்வியும் எனது இரு கண்கள் என்று சொல்வது போல தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கிட்டதட்ட ரூ.2 கோடிக்கும் அதிகமான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்கள்.

மேலும், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் கடந்த காலங்களில் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வந்தது. 

கடந்த ஆண்டிலிருந்து ஒரு கால் செயல்படாத நிலையிலிருந்தாலும் வழங்கலாம் என்ற அரசாணைப்படி இன்றைக்கு நம்முடைய மாவட்டத்தில் நிறைய மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகிறார்கள். அதுபோல, தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழகத்தில் நத்தம் புறம்போக்கில் 5 வருடங்களுக்கு மேல் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். 

அதன் ஒருபகுதியாக இன்று நம்முடைய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தூத்துக்குடி வட்டத்தைச் சேர்ந்த 93 பயனாளிகளுக்கு வரன்முறை பட்டா வழங்கவுள்ளார்கள். மருத்துவத்துறையில் மக்கள் சேவை ஆற்றி வருகின்ற செவிலியர்கள் இன்னும் அதிகளவில் மக்கள் சேவை ஆற்ற வேண்டுமென்ற அடிப்படையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் எல்லாம் இன்று நம்பிக்கையோடு நாங்கள் உங்களிடம் ஒப்படைக்கிறோம், மருத்துவ உபகரணங்களை நல்ல முறையில் பராமரித்து, மக்களுக்கு சேவையாற்றுங்கள் என்று கூறிக் கொள்கிறேன் நன்றி வணக்கம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யாழினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், அரசு அலுவலர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory