» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தருதல் என்ற ஒரு முன் முயற்சி எடுத்து வருகிறோம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில்
இன்று (19.12.2025) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக மிளகாயில் நவீன பயிர் மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து நடைபெற்ற மாவட்ட அளவிலான கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கண்காட்சிகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது : நமது மாவட்டத்தில் இருக்க கூடிய பல்வேறு வகையான மண்ணின் தன்மைகளை விளக்கும் விதத்தில் அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த வகையில் இப்பொழுது நாம் இருக்கக்கூடிய இந்த கோவில்பட்டி பகுதி கரிசல் மண் பூமி என்று சொல்லக் கூடிய கரிசல் மண் பரந்து விரிந்து காணப்படுகிறது.
நமது மாவட்டத்தில் பெருமளவு பகுதியில் இந்த கரிசல் மண் தான் நிறைந்திருக்கிறது. அதற்கு அடுத்ததாக செம்மண் கலந்த நிலப்பகுதிகள் அமைந்து இருக்கின்றன. இதில் குறிப்பாக வடப்பகுதி வட்டாரங்களான கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், புதூர், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் என்னென்ன விதமான தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன என்று குறிப்பிடுகின்ற பொழுது மிக முக்கியமாக மிளகாய் மிக அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
மாநில அளவில் நமது தூத்துக்குடி மாவட்டம் தான் மிளகாய் உற்பத்தியில் மிக அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யப்படுவதாகவும், மொத்த உற்பத்தியில் மாநில அளவில் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் வகிக்கக்கூடிய நிலையில் உள்ளது. இதில் முக்கியமாக பயிரிடப்படக்கூடிய ரகமான ராமநாதபுரம் குண்டு மிளகாய் என்று சொல்லக்கூடிய குண்டு மிளகாய் பயிரிட்டு வருகிறோம்.
ஆனால் நான் இந்த அரங்கத்திற்கு வருவதற்கு முன்னர் வெளியில் இருக்கக்கூடிய பல்வேறு வகையான மிளகாய் விதைகளை பற்றி எல்லாம், நமது வேளாண் அறிவியல் விஞ்ஞானிகளிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது கே1 மற்றும் கே 2 என்ற இரண்டு மிளகாய் வகைகள், 30 - 40 ஆண்டுகளுக்கு முன்பு நமது கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து புதிதாக உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
அந்த இரண்டு மிளகாய் வகைகள் மிகவும் மக்களால் விரும்பப்படக்கூடிய மற்றும் மிகச்சிறந்த ஒரு ரகத்தை உருவாக்கும் ஒரு முயற்சியில் கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டிருக்கிறது. இந்த இரண்டு ரகங்களை தவிர இன்னும் பல்வேறு விதமான வேளாண் ஆராய்ச்சினுடைய உயர் விளைச்சல் தரக்கூடிய இரகங்களை இங்கு காட்சி படுத்தியிருக்கிறார்கள்.
இதிலிருந்து நமக்கு தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், மாநில அளவில் மிளகாய் உற்பத்தியில் முதலிடம் அல்லது இரண்டாம் இடத்தில் நமது மாவட்டம் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக அதனுடைய உற்பத்தி திறன் என்று சொல்லக்கூடிய ஒரு ஏக்கருக்கு கிடைக்கக்கூடிய மகசூல் அளவின் பாகம் மிகக் குறைவான அளவில் தான் நமது மாவட்டத்தின் விளைச்சல் இருக்கிறது. சுமார் 500 - 480 கிலோ இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வேளாண்மைக்காக செய்த அந்த மொத்த செலவுகளை கூட எடுக்க முடியாத நிலைமையில் ஏற்பட்டு விடுவார்கள்.
எனவே எவ்வாறு உற்பத்தி திறனை பெருக்குவது? என்ற நோக்கத்தில் பல்வேறு விதமான முயற்சிகளை நமது மாவட்டத்தில் தொடங்கி இருக்கிறோம். அதில் ஒரு பகுதியாக பயிரிடக்கூடிய பகுதிகளில் எல்லாம் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தருதல் என்ற ஒரு முன் முயற்சி எடுத்து வருகிறோம். ஆயிரம் பண்ணை குட்டைகள் ஆயிரம் விவசாயிகளுக்கு அமைத்து தருவதன் மூலமாக குறைந்தபட்சம் 3,000 ஏக்கர் பரப்பில் அதாவது ஒரு பண்ணை குட்டை மூலமாக மூன்று ஏக்கர் அளவுக்கு அங்குள்ள பயிர்களை பாதுகாக்க முடியும்.
அடுத்த வேளாண்மை பருவம் வருவதற்கு முன்னால் நமது மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணைக் குட்டைகள் அமைக்க வேண்டும் என்ற ஒரு தீவிர முயற்சியை எடுத்து செயல்படுத்தி வருகிறோம். சரியான பருவத்தில் தண்ணீர் கொடுத்து விட்டால், மகசூல் இரண்டு மடங்கு பெருகும் என்கிற நோக்கத்தில் இதனை செயல்படுத்தி வருகிறோம். பல்வேறு நிறுவனங்களினுடைய சமூக பொறுப்பு நிதியின் (சி.எஸ்.ஆர்) மூலமாக இந்த செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறோம். இதனை நல்லபடியாக நமது விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
இதுமட்டுமில்லாமல் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்திய பல்வேறு விதமான சிறந்த உயர்ரக விதை வகைகளை எல்லாம் பார்த்து, அதில் சிறந்த ரகங்களை எல்லாம் தேர்வு செய்து, அதனை பயன்படுத்தி மகசூலை உயர்த்தி கொள்வதற்கான முன் முயற்சிகளில் விவசாயிகள் ஈடுபட வேண்டும். ஏற்கனவே நாம் குண்டு மிளகாய் சாகுபடி செய்து வந்திருந்தாலும், அதைவிட சிறப்பான ரகம் ஏதாவது இருந்தால் நிச்சயமாக அவற்றையும் நாம் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தோட்டக்கலைத் துறை என்பது ஒரு அழகான துறை. நமது மாவட்டத்தில் விளையக்கூடிய பல்வேறு விதமான தோட்டக்கலைப் பயிர்களை எல்லாம் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதனை செய்திருக்கின்ற தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கலை நோக்கத்தோடு மிக அழகாக செய்திருக்கிறார்கள். இவ்வளவு கலை நோக்கத்தோடு செய்திருக்கக்கூடிய இந்த பயிர்கள் என்பது வெறும் அழகுக்கு மட்டுமில்லாமல், அது விவசாயிகளுக்கு ஒரு வருமானம் தரக்கூடியதாகவும் அதன் மூலமாக ஒரு நல்ல நிலையான வாழ்க்கைக்கு தீர்வு தரக்கூடிய ஒரு பயிராகவும் அது இருக்க வேண்டும்.
உங்களுக்கு விதை வகைகளை வழங்குவார்கள். அவற்றையெல்லாம் எந்த வகையில் செயல்படுத்த முடியுமோ அதற்கேற்ற விதத்தில் நீங்கள் நல்லபடியாக செயல்படுத்தி, மென்மேலும் உற்பத்தியை பெருக்கி வாழ்வில் உயர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து, இந்த கருத்தரங்கம் வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள், தோட்டக்கலை துணை இயக்குநர் சுந்தரராஜன், வேளாண்மை துணை இயக்குநர், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சு.சுதாமதி, செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை மகேஷ், தோட்டக்கலை உதவி இயக்குநர், ஓட்டப்பிடாரம் செ.லட்சுமி நாராயண பிரியா, விவசாய பெருமக்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










