தமிழக அரசின் 'வெற்றிப் பயணம்' திட்டத்தின் கீழ் 12,000 பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம் வழங்கப்படுவதால், அரசு போக்குவரத்து கழகங்களுக்குத் தினசரி ரூ.15 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுவதாகப் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இதுகுறித்துத் தொழிற்சங்க நிர்வாகி கூறியதாவது: தமிழ்நாட்டில் விழுப்புரம், கும்பகோணம், மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 போக்குவரத்து மண்டலங்கள், மாநில விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் என மொத்தம் 8 பிரிவுகளின் கீழ் தினசரி 19,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சராசரியாக 1 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர்.

கடந்த கால நிலவரம்: கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 'விடியல் பயணம்' என்ற பெயரில் 7,714 மாநகர, நகர மற்றும் கிராமப்புறப் பேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்பட்டது. அதற்கு முன்பு தினசரி வருவாய் ரூ.45 கோடி முதல் ரூ.47 கோடி வரை இருந்தது. இலவசப் பயணத் திட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அரசு தினசரி ரூ.25 கோடி மானியம் வழங்கிய போதிலும், தினசரி ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது.

தற்போதைய நிலவரம்: கடந்த மே மாதம் 10-ஆம் தேதி த.வெ.க. தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர், 'வெற்றிப் பயணம்' திட்டத்தின் கீழ் தொலைதூர, சொகுசு மற்றும் ஏ.சி. பேருந்துகள் தவிர்த்து 12,000 பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தற்போது 'வெற்றிப் பயணம்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், போக்குவரத்து கழகங்களின் தினசரி வருவாய் அதிகபட்சம் ரூ.9 கோடி வரையும், பெரும்பாலான நாட்களில் ரூ.7 கோடியைத் தாண்டுவதே சிரமமாகவும் உள்ளது. இதனால் தினசரி சுமார் ரூ.40 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் சூழலில், அரசு தரப்பில் தினசரி ரூ.25 கோடி மட்டுமே மானியமாக வழங்கப்படுவதாகத் தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர். இதனால் மீதமுள்ள ரூ.15 கோடி தினசரி நஷ்டத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளை தினசரி இயக்கச் சுமார் ரூ.19 கோடி செலவாகிறது. இதில் டீசல் செலவு மட்டும்: ரூ.16 கோடியே 17 லட்சம். பேருந்துகள் பராமரிப்புச் செலவு: ரூ.2 கோடியே 35 லட்சம் தினசரி எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்குக் கூட டிக்கெட் வழியாக வருமானம் கிடைக்காத சூழல் நிலவுவதாகத் தொழிற்சங்க நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வருவாய் இல்லாத வழித்தடங்களில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் பேருந்துகளை இயக்குவது நிறுத்தப்பட்டு, பொதுமக்களின் கடும் விமர்சனத்திற்குப் பின்னர் மீண்டும் இயக்கப்பட்டதாகவும் தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர்.

மேலும், சத்தமின்றிப் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதுடன், குறுகிய தூரப் பேருந்துகள் தொலைதூரப் பேருந்துகளாக மாற்றப்பட்டு வருவதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் போக்குவரத்துத் தொழிலாளர்களிடையே அச்சமும் கவலையும் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.