தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 'சுட்டீஸ் பார் குட்டிஸ் 2026' குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, கடந்த ஒரு வார காலமாக நான்கு மண்டலங்களில் ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழா முத்துநகர் கடற்கரை பூங்காவில் நடைபெற்றது. விழாவிற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையாளர் பிரியங்கா வரவேற்புரையாற்றினார்.
சுகாதாரம், டெங்கு விழிப்புணர்வு, மக்கும்-மக்காத குப்பை மற்றும் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இறுதியாக நடைபெற்ற 'விழிப்புணர்வு வேண்டுமா? பொறுப்புணர்வு வேண்டுமா?' என்ற வழக்காடு மன்ற நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பேசினர். இந்நிகழ்விற்கு நடுவராகச் செயல்பட்ட ஜெயக்குமார், "மாநகராட்சி வளர்ச்சிக்குப் பொதுமக்களின் பொறுப்புணர்ச்சி அவசியம்" என்று தீர்ப்பளித்தார்.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 60 பேருக்கு ஊக்கத்தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களும், போட்டிகளில் கலந்துகொண்ட 700 பேருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், "தூத்துக்குடியை விட்டுப் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியே சென்றுவிட்டுத் தற்போது திரும்பி வருபவர்கள், மாநகராட்சி அடைந்துள்ள வியத்தகு வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைகின்றனர். தூய்மைப் பணிகள்: குப்பைகளை 4 பிரிவுகளாகப் பிரித்து வழங்கும் நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. காலையில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
குப்பை அகற்றும் பணிக்காக மட்டும் மாதந்தோறும் ரூ.3 கோடி செலவிடப்படுகிறது. டெங்கு தடுப்பு: மாநகராட்சிப் பகுதியில் 250 டெங்கு களப்பணியாளர்கள் கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வருவதால், டெங்கு காய்ச்சல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: முன்பு தருவிகுளம் குப்பை கிடங்கு பகுதியில் துர்நாற்றம் வீசிய நிலை மாறி, தற்போது அங்கு லட்சக்கணக்கான மரங்கள் நடப்பட்டுப் பூஞ்சோலையாக மாறியுள்ளது. மாணவர்கள் படிப்போடு நின்றுவிடாமல், உடல் ஆரோக்கியத்தைப் பேண விளையாட்டுப் போட்டிகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும். மாசு இல்லாத தூத்துக்குடியை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என்றார்.
விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி நகர்நல அலுவலர் கணேஷ், சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர், ராஜபாண்டி, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், மும்தாஜ், இசக்கிராஜா, ஜெபஸ்டின்சுதா, மெட்டில்டா, மீனவரணி அமைப்பாளர் டேனியல், திமுக நிர்வாகிகள் பேச்சிமுத்து, வேல்பாண்டி, சீதாலட்சுமி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

