தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை தீத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (34). இவர் கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் திட்டங்குளம் செல்லும் பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். கடந்த 12-ஆம் தேதி நள்ளிரவு இவரது கடையின் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.35.98 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துத் தப்பினர்.
இதுகுறித்து ரவிக்குமார் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளின் உதவியுடன் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (66) மற்றும் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலு என்ற பாலசுப்பிரமணியன் (49) ஆகிய இருவரும் மேற்கூரையை உடைத்துப் பணத்தைத் திருடிச் சென்றது உறுதியானது.
இவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி சோதனைச்சாவடியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இருவரை மடக்கி விசாரித்ததில், அவர்கள் உரக்கடையில் கொள்ளையடித்த ராஜேந்திரன் மற்றும் பாலசுப்பிரமணியன் என்பது தெரியவந்தது.
உடனடியாக இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் அளித்த தகவலின் பேரில் ரகசிய இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.35.98 லட்சம் ரொக்கப்பணத்தை முழுமையாகக் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் மீது ஏற்கனவே விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 32 திருட்டு வழக்குகளும், பாலசுப்பிரமணியன் மீது விருதுநகர் மாவட்டத்தில் 7 திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

