கோவை சிவானந்தா காலனி டாடாபாத் சிக்ஸ் கார்னர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரி. இவர் சமையல் மற்றும் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அது தொடர்பான வீடியோக்களை தனது யூடியூப் சேனலிலும் வெளியிட்டு வருகிறார்.
அவர், கோவை சைபர் கிரைம் போலீசில் திருச்செந்தூரை சேர்ந்த மணிகண்டன் (37) என்பவர் மீது ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: யூடியூப்பில் நான் பதிவிடும் வீடியோக்களை மணிகண்டன் என்பவர் திருடி திருச்செந்தூர் மணிகண்டன் என்ற அவரது பெயரிலான யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்தார்.
மேலும் எனது தொழில் மற்றும் நான் விற்பனை செய்யும் பொருட்கள் குறித்தும், என்னை பற்றியும் பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் பரப்பினார். எனது பெண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு அவதூறு பேசி வந்தார்.
இதை கண்டித்தபோது அவர் என்னை அவதூறாக பேசி மிரட்டலும் விடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் லிங்கேஸ்வரன் ஆகியோர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
அப்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மணிகண்டன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று மணிகண்டனை கைது செய்தனர். கைதான மணிகண்டன் மீது தமிழ்நாடு முழுவதும் 17 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

