தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, சுவாமிசன்னதி தெருவைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகன் விக்னேஷ் (30). இவர் தற்போது புதுக்கோட்டை மத்திய-மாநில அரசு குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தார். விக்னேஷுக்கு அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.
இவர் தனது முதல் மனைவி முத்துலட்சுமி (32) என்பவரைப் பிரிந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கார்த்திகா (20) என்பவரைக் காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால், விக்னேஷின் தீவிர மதுப்பழக்கம் காரணமாகக் கார்த்திகாவும் இவரைப் பிரிந்து சென்று, கோயம்புத்தூரில் கேட்டரிங் படிப்பு படித்து வருகிறார்.
இதனால் மனவருத்தத்தில் இருந்த விக்னேஷ், புதுக்கோட்டையில் உள்ள வீட்டில் தனது இரண்டாவது மனைவியின் தாயார் நாகம்மாள் என்பவருடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வீட்டிற்குள் சென்ற விக்னேஷ் நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்கவில்லை.
சந்தேகமடைந்த நாகம்மாள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, விக்னேஷ் மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டுப் பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்துத் தகவலறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றினர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக உடலைத் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

