தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
நேற்று சூரபத்மனின் தம்பியான தாரகாசூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெற்றன.
7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் 11.30 மணியளவில் சூரபத்மனின் தம்பியான தாரகாசூரனை முருகப்பெருமான் வதம் செய்வதற்கு முன்னர் வீரபாகு தேவரை முருகப்பெருமான் தூதாக அனுப்பி தாரகாசூரனிடம் பேச்சுவார்த்தைக்காக அனுப்புகிறார்.
3 முறை தூது சென்ற வீரபாகு தேவரிடம் தாரகாசூரன் அடிபணியவில்லை. இதனால் கோபம் கொண்ட முருகப்பெருமான் கோவில் மேலவாசல் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் போர்க்களத்திற்கு வருகிறார்.
அங்கு தன்னை எதிர்த்து நின்ற தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன், பிரதோஷ குழு தலைவர் முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தாரகாசூரன் சம்ஹார நிகழ்வு கழுகுமலை திருத்தலத்தில் மட்டுமே நடைபெறும். வேறு எந்த திருத்தலத்திலும் நடைபெறாது. 6-ம் நாள் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது.
இதையொட்டி காலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணியளவில் திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடக்கிறது.மதியம் 12 மணிக்கு கோவிலில் சண்முகர் அர்ச்சனை வழிபாடு நடைபெறும். மாலை 4 மணியளவில் சுவாமி வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி போர்க்களத்திற்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை 5 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
இரவு 7 மணியளவில் கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். வருகிற 17-ந் தேதி இரவு 7 மணியளவில் சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
18-ந் தேதி இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 19-ந் தேதி பட்டினபிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

