முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டுச் சிறப்பு அபிஷேகங்களும், இரவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் கிரிப்பிரகார உலாவும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்குத் திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் தொடங்கின. மாலை 4.00 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது. பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு அலங்காரம், தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து கிரிப்பிரகார உலாவும் நடைபெற்று கோவிலில் சாயாபிஷேகம் நடைபெறும்.
விழாவை முன்னிட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்களும் கோவிலில் குவிந்துள்ளனர். கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கூடாரங்களில் தங்கி விரதமிருக்கும் பக்தர்கள் பக்திப் பாடல்கள் பாடி முருகனை வழிபட்டு வருகின்றனர். கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்வை எளிதில் காணும் வகையில் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே பெரிய எல்.இ.டி. திரைகள் மற்றும் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மார்க்கமாக வரும் வாகனங்களை நிறுத்தப் புறநகர்ப் பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களும், திருச்செந்தூர்-நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி சாலைகளில் 3 தற்காலிகப் பேருந்து நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் சுமார் 4,100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரையில் தடுப்புக் கம்பிகள், கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கடலில் பக்தர்கள் ஆழமான பகுதிக்குச் செல்லாமல் தடுக்க மிதவைத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் திருச்செந்தூர் நகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டு, மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
7-ஆம் திருநாளான நாளை (திங்கள்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளைக் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் அருணாசலம் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

