தூத்துக்குடி மக்களின் தந்தை' எனப் போற்றப்படும் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தின் 157-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இன்று (15.11.2026) தமிழ்நாடு அரசு சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். பூங்கா அருகில் அமைந்துள்ள ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பேசுகையில், குரூஸ் பர்னாந்தின் வாழ்க்கை மற்றும் தூத்துக்குடிக்கு அவர் ஆற்றிய வரலாற்றுச் சாதனைகளை நினைவுகூர்ந்தார்: 15.11.1869 அன்று தூத்துக்குடியில் ஜான் சாந்த குரூஸ் பர்னாந்து என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். திருமதி தொபியாங் அம்மாள் பர்னாந்து என்பவரைத் திருமணம் செய்து 4 ஆண் பிள்ளைகளையும், 3 பெண் பிள்ளைகளையும் பெற்றார்.
21.12.1909 முதல் 5 முறை தூத்துக்குடி நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நகர மக்களின் நலனுக்காக அயராது பாடுபட்டார். அக்காலத்தில் சுகாதாரமற்ற கிணற்று நீரால் காலரா, பிளேக் போன்ற கொடிய நோய்கள் பரவி மக்கள் உயிரிழந்தனர். முதலில் இலங்கை கொழும்பு துறைமுகத்திலிருந்து கப்பல் மூலமும், பின்னர் கடம்பூரிலிருந்து ரயில் மூலமும், கோரம்பள்ளம் குளத்திலிருந்து கால்வாய் மற்றும் வட்டக்கிணறுகள் மூலமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தார்.
நிரந்தரத் தீர்வாக, 24 மைல் தொலைவிலுள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கிணறுகள் தோண்டி, வல்லநாட்டில் சுத்திகரிப்பு செய்து பெரிய குழாய்கள் (பைப்லைன்) மூலம் தூத்துக்குடி நகருக்குக் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்.
இன்றளவும் தூத்துக்குடி மாநகர மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாவதற்கும், தூத்துக்குடி மாபெரும் மாநகரமாக வளர்ந்திருப்பதற்கும் குரூஸ் பர்னாந்து எடுத்த சீரிய முயற்சிகளே அடித்தளமாகும். அதனாலேயே அவர் 'தூத்துக்குடி மக்களின் தந்தை' எனப் போற்றப்படுகிறார் என ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி. பிரியங்கா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பெ.சா. கருப்பணராஜவேல், தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

