தூத்துக்குடியைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது நண்பர்களான 2 சிறுவர்களுடன் சேர்ந்து கையில் அரிவாள்களை வைத்துக்கொண்டு வன்முறையைத் தூண்டும் வகையில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியதையடுத்து, இது குறித்துத் தகவலறிந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் செயல்பட்ட நவீன்குமார் மற்றும் அவரோடு சேர்ந்து ரீல்ஸ் வீடியோவில் தோன்றிய 2 சிறுவர்கள் என மொத்தம் 3 பேர் மீது தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட நவீன்குமாரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் காவல்துறையினர் அதிரடியாக முடக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தென்பாகம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.