தூத்துக்குடி மதுரை புதிய துறைமுக பைபாஸ் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாரி செட் சூப்பர்வைசர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் குமார் மகன் செந்தில் (40). இவருக்கு பூமாதேவி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். செந்தில் லாரி செட் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி தூத்துக்குடி மதுரை புதிய துறைமுக பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் ஆலை அருகே செந்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த செந்திலை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துச் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் தனசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய அடையாளம் தெரியாத வாகனத்தையும், அதனை ஓட்டிச் சென்ற நபரைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீசார் ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.

