தூத்துக்குடி முத்தையாபுரம் சஞ்சீவியார் புரத்தைச் சேர்ந்தவர் செல்வின்பிரபு (37). இவர் தூத்துக்குடி தருவைகுளம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம், திருமண வரன் பார்த்துத் தருவதாகக் கூறிச் செல்வின்பிரபு அறிமுகமாகியுள்ளார்.
தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அந்த பெண்ணிடம் தனிப்பிரிவு ஏட்டு செல்வின்பிரபு தவறாக நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், இது குறித்து உடனடியாக தருவைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணையில், பெண் அளித்த புகார் உண்மை எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து, பாலியல் தொல்லை கொடுத்த தனிப்பிரிவு ஏட்டு செல்வின்பிரபுவை உடனடியாகச் சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். மேலும், அவர் மீது தனியாக வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

